மண்ணில் விளைந்த நெல்..!

அரிசி

கதிரவனைக் கையெடுத்து தன்னானே னானே//
நாற்றங்காலில் காலைவச்சோம் தில்லாலே லேலே//
பச்சநாத்து பளபளக்கும் தன்னானே னானே//
பத்திரமா காலைவையி தில்லாலே லேலே!//

பச்சப்புள்ளயத் தூக்குறாப்போல தன்னானே னானே//
பாத்துமெல்ல எடுக்கணுன்டி தில்லாலே லேலே//
எடுத்தநாத்த முடியப்போட்டு தன்னானே னானே//
பக்குவமா எடுத்துவையி தில்லாலே லேலே!//

முடிஞ்சமுடிய ஒவ்வொண்ணா தன்னானே னானே//
வயலில்கொண்டு சேத்தனுண்டி தில்லாலே லேலே//
முடியஅவுத்து வயலுலதான் தன்னானே னானே//
ஒவ்வொன்னா நட்டிடனும் தில்லாலே லேலே!//

நேர்வரிசையில வச்சுடனும் தன்னானே னானே//
குறுக்கமறுக்க நட்டிடாத தில்லாலே லேலே//
கருப்புகவுனி புத்துநோய தன்னானே னானே//
காணாமப் போகச்செய்யும் தில்லாலே லேலே!//

மாப்பிள்ளைசம்பா தின்னுபுட்டா தன்னானே னானே//
நரம்பு வலுவாகுமடி தில்லாலே லேலே//
பூங்காரு போதுமடி தன்னானே னானே//
புள்ளைக்கு அறுவைதேவையில்ல தில்லாலே லேலே!//

மூங்கிலரிசி எடுத்துகிட்டா தன்னானே னானே//
முழங்காலுவலி போகுமடி தில்லாலே லேலே//
அறுபதாங்குறுவை அரிசி தன்னானே னானே//
எலும்பையிரும்பா ஆக்குமடி தில்லாலே லேலே!//

குடைவாழை அரிசிதின்னு தன்னானே னானே//
குடலைச்சுத்தம் செஞ்சுக்கடி தில்லாலே லேலே//
நீலச்சம்பா ரத்தசோகைக்கு தன்னானே னானே//
தங்கச்சம்பா இதயத்துக்கு தில்லாலே லேலே!//

சூரக்குறுவை உடலிளைக்க தன்னானே னானே//
தூயமல்லி உள்ளுறுப்புக்கு தில்லாலே லேலே//
சீரகச்சம்பா அழகுகூட்டும் தன்னானே னானே//
வாடன்சம்பா தூக்கந்தரும் தில்லாலே லேலே!//

பாரம்பரிய நெல்வகைய தன்னானே னானே//
பக்குவமாக் காத்திடுவோம் தில்லாலே லேலே!//
மண்ணுநம்ம சாமியுங்கோ தன்னானே னானே//
கண்ணப்போல காத்திடுவோம் தில்லாலே லேலே!//

த.தமிழ்ப்பூங்குன்றன்
குமரலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *