விண்வெளியில் நீண்டகாலம் பயணிக்கிறவர்களின் உடலுறவுத் தேவைகள் பற்றி ஜேர்மனிய விண்வெளி வீரரிடம் கேள்விக்கணைகள்!
இவ்வருட இறுதியில் விண்வெளியில் SpaceX Crew-3 இல் பறந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஆறு மாதங்கள் தங்கவிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் மௌரர். அவரைப் பேட்டிகண்ட பத்திரிகையாளர்கள் பொதுவாகப் பலராலும் அளவளாவுவதில் தவிர்க்கப்படும் கேள்விகளான “விண்வெளி வீரர்களின் பாலுணர்வுத்தேவை” பற்றிய கேள்விகளால் துளைத்தார்கள்.
பொதுவாகவே சமூகத்தில் பலரும் பேச வெட்கப்படும், அல்லது தவிர்க்கும் விடயமான பாலுணர்வு பற்றிய விடயங்கள் விண்வெளி வீரர்களிடையே எப்படியானது என்பது பலரிடமும் இருக்கிறது. தற்போது ஒரு வருடத்துக்குக் குறைவாகவே விண்வெளியில் வீரர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். ஆனால், மிக விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படும்போது அவர்கள் அந்த அன்னியச் செயற்கைச் சூழலில் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பறக்கவேண்டியிருக்கும்.
எனவே, விண்வெளி வீரர்கள் ஒரு உத்தியோகபூர்வமான விடயத்தில் ஈடுபட்டாலும் கூட அவர்களின் உடலுறவு, பாலுணர்வு பற்றிய தேவைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். மத்தியாஸ் மௌரரும் அதையே குறிப்பிடுகிறார். அதுபற்றித் தனக்கு அதிகம் தெரியாது என்று ஒத்துக்கொண்ட அவர் விண்வெளியில் பாலுணர்வு ஆரோக்கியம் பற்றி வெளிப்படையாகப் பேசுதல் அவசியம் என்று ஒத்துக்கொள்கிறார்.
விண்வெளியில் உடலுறவு பற்றிய விபரங்கள் பலருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் ஏற்கனவே நடந்த இரண்டு விண்வெளிப் பயணங்களில் அப்படியான உறவு விண்வெளி வீரர்களிடையே ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
சோவியத்தின் விண்கலமான Soyuz T-7 இல் பறந்த ரஷ்யாவின் ஸ்வெட்ஸ்லானா சாவிஸ்கயா விண்வெளியில் பறந்துகொண்டிருந்த ஆராய்ச்சி நிலையத்தில் எட்டு நாட்கள் இருந்தார். 1982 இல் அவர் அவ்வாராய்ச்சி நிலையத்துக்கு வந்தபோது ஏற்கனவே இரண்டு ஆண் சகாக்கள் அங்கே இருந்தார்கள். அப்பயணத்தின்போது சோவியத் விஞ்ஞானிகள் ஏற்கனவே அந்த விண்கல ஆராய்ச்சி நிலையத்தை உடலுறவு கொள்ளக்கூடிய விதத்தில் வடிவமைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
நாஸா 1992 இல் தனது விண்கலமான Endeavor ஐ விண்வெளியில் ஒரு உண்மையான தம்பதிகளுடன் பறக்கவைத்தது. மார்க் லீ, ஜான் டேவிஸ் ஆகிய அவ்விருவரும் அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டவர்கள். அந்த விண்வெளிப் பயணம் அவர்களுடைய தேனிலவுப் பயணம் என்று குறிப்பிடப்படுகிறது.
விண்வெளிப் பயணங்கள் அவ்வீரர்கள் உயரத்தில் பறக்கும்போது அவர்களுடைய பாலுணர்வு உணர்ச்சியின் அளவைக் குறைப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவரை விண்வெளியில் பறந்த பெண்களின் எண்ணிக்கை 12 % க்கும் குறைவாகவே இருப்பதால் ஆண்களிடையே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளிலேயே மேற்கண்ட விபரம் தெரியவருகிறது.
விண்வெளியில் பறந்த பெண்களில் மிகச்சிலரே அதற்காகப் பிறப்புக் கட்டுப்பாடு செய்ய ஒப்புக்கொண்டவர்களாகும். அதனால், அவர்களின் உடலின் மாதவிலக்குச் சுற்றை மாற்றியமைக்கும் செயற்கை மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அப்பெண்களிடையே விண்வெளிப் பயணம் ஏற்படுத்தும் இயற்கையான மாற்றங்களைத் தெரிந்துகொள்வது முடியாமல் போய்விட்டது.
எப்படியாயினும் விண்வெளிப் பயணம் இரு பாலினத்தினரிடையேயும் அவர்களுடைய உடலின் நேர வித்தியாச உணர்வையும் மாற்றுகிறது.
விண்வெளியில் தனது 10 நாள் பயணத்தின் போதான பாலுணர்வு பற்றி ஜெர்மனிய விண்வெளி வீரர் உல்ரிச் வால்ட் தனது புத்தகத்தில் (A hell ride through time and space) எழுதியிருக்கிறார். அவர் தான் விண்வெளியில் இருந்தபோது பாலுணர்வு பற்றிய எண்ணங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்