வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு ஈரானியர்கள் போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.
இரண்டு மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஈரானின் மூன்றாவது பெரிய நகரில் மக்கள் அப்பகுதியினூடாக ஓடும் ஆற்றின் வறட்சிக்கு அரசின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இஸ்வஹான் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நகரை முற்றுகையிட்டிருப்பதாக அரசின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பிரதேசத்திநூடாக ஓடும் சைதாண்டே ரூட் [வாழ்வாதாரத்தின் ஆறு] கடந்த இருபது வருடங்களாகவே வருடத்தின் பெரும்பகுதி வறண்டு போய்விடுகிறது. பல வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தலங்களைக் கொண்ட இஸ்வஹான் பிராந்தியத்து மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பவை விவசாயமும், சுற்றுலாத்துறையுமாகும். வரண்டுபோன ஆற்றினாலும், நிலக்கீழ் நீர்மட்டம் பொதுவாகவே அப்பகுதியில் குறைந்துவிட்டிருக்கிறது.
சைதாண்டே ரூட் ஆற்றை வழியில் மறித்து அணை கட்டப்பட்டிருப்பதுடன் அதை வேறு நகரை நோக்கித் திருப்பிவிட்டிருப்பதே தங்கள் பகுதியின் வரட்சிக்குக் காரணமென்று குற்றஞ்சாட்டி ஒரு வாரத்துக்கும் அதிகமாகப் போராடி வருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
ஈரானிய அரசு தான் அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடுகிறது. போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி. அத்துடன் அவர் அதையடுத்துள்ள பிராந்தியங்களின் ஆட்சியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
“நாட்டின் விவசாய மற்றும் சக்தித்துறை உயரதிகாரிகளுடன் பேசி, ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார் நாட்டின் உப ஜனாதிபதி.
உலகில் நீர்ப்பிரச்சினையால் வாடும் நாடுகளில் ஈரான் முக்கியமானது. நாட்டில் பல வருடங்களாகவே ஏற்பட்டிருக்கும் வரட்சியால் கடந்த வருடத்திலேயே நீர் நிலைகள், நீர்த்தேக்கங்கள் அளவில் பாதியாகக் குறைந்துவிட்டிருக்கின்றன. அதனால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கலவரங்கள் உருவாகி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்