சர்வதேச எரிநெய் விலையைக் குறைப்பதற்காக முக்கிய நாடுகள் தமது பிரத்தியேகக் கையிருப்பை விற்கின்றன.
பெற்றோலிய உற்பத்தி நாடுகள் சவூதி அரேபியாவின் திட்டத்துக்கு இணங்கி எரிநெய் உறிஞ்சலைக் குறைத்திருப்பதால் உலகச் சந்தையின் தேவைக்கேற்றபடி அது கிடைப்பதில்லை. எனவே, செயற்கையாக ஒரு விலையேற்றம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. விளைவாகப் பணவீக்கம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தாக்க ஆரம்பிக்கின்றன.
நிலைமை எதிர்கொள்ள, கடந்த வாரம் ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளை நோக்கி வேண்டுகோளொன்றை விட்டிருந்தது. தமது அவசரகாலத் தேவைக்காகப் பிரத்தியேகமாகச் சேமித்து வைத்திருக்கும் எரிநெய்க் கிடங்கிலிருந்து ஒரு பகுதியை உலகச் சந்தையில் விற்க முன்வரும்படி இந்தியா கேட்டிருந்தது.
இந்தியாவின் கோரிக்கைக்கு முக்கிய நாடுகள் செவிகொடுத்திருக்கின்றன. அதனால் இந்தியா தனது பிரத்தியேகக் கையிருப்பிலிருந்து 5 மில்லியன் பீப்பாய் எரிநெய்யைச் சந்தையில் விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த அளவு சுமாராக இந்தியாவின் ஒரு நாள் பெற்றோலியப் பாவிப்பு ஆகும்.
அமெரிக்கா தனது சேமிப்புக் கிடங்கிலிருந்து 50 மில்லியன் பீப்பாய்களை விற்கப்போகிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளும் தம்மிடமிருக்கும் அவசரகாலச் சேமிப்புக் கிடங்கிலிருந்து தமது நிலைமைக்கேற்ப ஒரு பங்கை விற்பனைக்கு வெளியே கொண்டுவரச் சம்மதித்திருக்கின்றன.
எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் மாதாமாதம் 4,000,000 பீப்பாய்களை உலகச் சந்தை விற்பனைக்கு அதிகரித்து வருகின்றன. ஆனால், அது உலகச் சந்தையின் தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானதாக இல்லை.
சில வாரங்களாகத் தொடர்ந்து ஏறிவந்த எரிநெய் விலை சில நாட்களாக உலகச் சந்தையில் மலிவாகி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்