எண்ணெய்த் தயாரிப்பு, கொரோனாக் கட்டுப்பாடுகள், பொருளாதார வலயங்கள் பற்றி முட்டி மோதிக்கொள்ளும் சவூதியும், எமிரேட்ஸும்.

நீண்ட காலமாக ஒரே வழியில் நடைபோட்டுக்கொண்டிருந்த சவூதி அரேபியாவுக்கும், எமிரேட்ஸுக்கும் இடையே பலமான முரண்பாடுகள் உண்டாகியிருக்கின்றன. முடிந்த வரையில் அவைகளை வெளியே வரவிடாமல் அவர்களும் சகாக்களும் மறைத்து வைக்க முற்பட்டாலும் ஏற்பட்டிருக்கும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வுகள் பற்றிய நடப்புகளில் வெளிவருகின்றன.

சுமார் இரண்டு வருடங்களாகப் படிப்படியாகக் குறைந்துவந்த எண்ணெய் விலை எண்ணெய் வள நாடுகளைக் கடுமையாக பாதித்தன. பணக்கார அராபிய நாடுகள் அதற்கு விதிவிலக்கல்ல. அதைத் தொடர்ந்து கொரோனாத் தொற்றுக்களால் ஏற்பட்ட பொது முடக்கங்கள் சர்வதேசச் சந்தையில் எரிசக்தி எண்ணெய்க்கான தேவையை மேலும் குறைத்தன. ஏற்கனவே பலமாக அடிவாங்கியிருந்த ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகளின் பொருளாதாரம் அதனால் மேலும் பாதிக்கப்பட்டன.

மீண்டும் எண்ணெய் விலையை உயர்த்துவதற்கான திட்டமாக தாம் சந்தைக்கு அனுப்பும் எண்ணெயின் அளவைக் படிப்படியாகக் குறைத்து வர அவர்கள் திட்டமிட்டார்கள். பணக்கார எண்ணெய் வள நாடுகளான சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகியவை தமது அரசியல் பலத்தையும் பாவித்து மற்ற நாடுகளை அத்திட்டத்தை ஏற்கவைத்தார்கள். தமது நாடுகளின் பொருளாதாரங்கள் பணக்கார நாடுகளின் பொருளாதாரத்தை விட அதனால் பாதிக்கப்படுவதைச் சகித்துக்கொண்டு மற்றைய நாடுகளும் அதற்கு ஒப்புக்கொண்டன.

எண்ணெய் விலை ஏற்றத்துக்குப் பின்னாலிருந்த சவூதிய இளவரசன் முஹம்மது பின் சல்மானுக்கும் அவருடன் இணையாகப் பல விடயங்களில் கைகோர்த்திருந்த எமிரேட்ஸின் இளவரசன் முஹம்மது பின் ஸாயித்துக்குமிடையெ சமீப காலமாக மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.  பிராந்திய அரசியலில் மட்டுமல்ல, எண்ணெய்த் தயாரிப்பின் அளவுகளிலும் தாம் குட்டப்பட்டிருப்பதாக உணர்கிறார் முஹம்மது பின் ஸாயித்.

எண்ணெய் விலை உயர்வுக்காகத் தயாரிப்புக் குறைக்கப்பட்டபோது, உறிஞ்சப்படும் எண்ணெயில் எந்தெந்த அளவை எந்தெந்த நாடு செய்யலாம் என்பது ஒபெக், ஒபெக் + நாடுகளிடையே வகுக்கப்பட்டது. அதன்படி சவூதி அரேபியா தனது தயாரிப்பில் 5 விகிதத்தைக் குறைக்க, எமிரேட்ஸோ 18 விகிதத்தைக் குறைத்திருக்கிறது. எனவே தொடர்ந்தும் அதே அளவைத் தயாரிப்பதானால் தனது எண்ணெய் உறிஞ்சல் அதிகரிக்கப்படவேண்டுமென்று கோருகிறது எமிரேட்ஸ். 

அதைத் தவிர வளைக்குடா நாடுகளின் வர்த்தகக் கூட்டமைப்பினுள் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதில் சவூதி புதிய வரிகளை அறிவித்திருக்கிறது. அதன்படி இஸ்ராயேலுடன் கூட்டாக எமிரேட்ஸ் உற்பத்திகளைச் செய்யும் வலயங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்குச் சவூதி அரேபியா கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. மேலும் எமிரேட்ஸும் இஸ்ராயேலும் கைகோர்த்து மத்திய கிழக்கு நாடுகளை இஸ்ராயேலுடன் நட்பாக்கும் முயற்சியில் சவூதி இன்னும் இணையவில்லை என்பதும் எமிரேட்ஸுக்கு மனஸ்தாபத்தை உண்டாக்கியிருக்கிறது.

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த எமிரேட்ஸ் பாவிக்கும் வழிவகைகள் சவூதி அரேபியாவுக்கு ஏற்புடையதாக இல்லையென்பதும் இரண்டு நாடுகளுக்குமிடையே மனக்கசப்பை உண்டாக்கியிருக்கின்றன. விளைவாக ஞாயிறன்று முதல் சவூதி அரேபியா எமிரேட்ஸுடனான விமானத் தொடர்புகளை வெட்டிக்கொண்டிருக்கிறது.

தற்போது உலகச் சந்தையில் எண்ணெய்த் தேவைக்கு ஏற்றளவு தயாரிப்பு இல்லாததால் பெற்றோல் விலை எகிறிக்கொண்டிருக்கிறது. அந்த நிலையில் தயாரிப்பை அதிகரிக்கவேண்டுமென்று எண்ணெய் வள நாடுகளின் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால் எண்ணெய்த் தயாரிப்பை அதிகரிப்பது பற்றி ஒபெக் நாடுகள் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருந்தன. ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி குறைவான தயாரிப்பால் விலையுயர்ந்து வருவது தமது நோக்கத்திற்கு வெற்றிதருவதால் அதையே திட்டமிட்டபடி ஏப்ரல் 2022 வரை தொடர விரும்புகிறது சவூதி அரேபியா. எமிரேட்ஸோ தனது தயாரிப்புப் பங்கு அதிகரிக்கப்படாவிட்டால் தாம் அதற்குத் தயாராக இல்லையென்று கூறிப் பேச்சுவார்த்தைக்கே மறுத்துவிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *