சைபீரியாவின் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் சுரங்கத் தொழிலாளர்களும், மீட்புப் பணியாளர் சிலரும் இறந்தனர்..
ரஷ்யாவின், சைபீரியப் பிராந்தியத்திலிருக்கும் கெமரோவா பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரிச் சுரங்கமொன்றில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் உள்ளே ஏற்பட்ட இடிபாடுகளால் பலர் இறந்தும், காயப்பட்டும் இருக்கிறார்கள். சில பத்துப் பேர் வெளியே வரமுடியாமல் சுரங்கத்துக்குள் மாட்டுப்பட்டிருந்தார்கள். அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
ஐம்பது பேர் இறந்து, 43 பேர் காயப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கும் Listvyazhnaya சுரங்கத்தின் மீட்புப்படையினர் அங்கே தொடர்ந்தும் இடிபாடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் மீட்புப் பணிகளை நிறுத்திவிடதாகத் தெரிவித்தார்கள். ஏற்கனவே 236 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
தீவிபத்தால் ஏற்பட்ட பெரும் புகைமூட்டம் சுரங்கப்பகுதியை ஆட்கொண்டிருப்பதால், உள்ளே மாட்டிக்கொண்டிருப்பவர்களின் நிலைமை பற்றித் தெரியாது. அவர்களுடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. 39 சுரங்கத் தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பவர்கள் என்று கணிக்கப்பட்டது. பின்னர் அவர்களும் இறந்துவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சுரங்கத்தொழிலாளர்களுக்கு ஆவன செய்யும்படியும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்படியும், தொழிலாளர் குடும்பங்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யும்படியும் ஜனாதிபதி புத்தின் உத்தரவிட்டிருப்பதாக நகரின் ஆளுனர் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்