உழவன்

உழுதக் களைப்பை உருவரியாய் உடலெழுத
எழுத வந்த வெப்பத்தை ஏமாற்றத் தெரியாதான்
விழுது யென வியர்வையதை மண்ணி லூன்றி
விளைந்திடுமா விண்ணோக்கும் வெகுளிக்காரன்!

கோவணமும் சேவனமும் மாறா தின்றும்
ஆவணமாம் ஏர் தூக்கி கழனிப் போவான்
பா வனத்தை காணவரும் புலவன் போல
பயிர் வனத்தைக் காண்பதற்கு துடிக்கும் நெஞ்சம்!

ஈ வணங்கும் இவன் காலை உழைப்பு கண்டு
இருகாளை உழைக்கு மிவன் பிழைப்பு கண்டு
தாய் தந்த பாலதனை தவறா நித்தம்
தவணை முறை மாறாமல் மண்ணுக்கீவான்!

உயிருக்கு உயிரூட்ட உயிரைத் தேய்க்கும்
உன்னத மென் கலைதானே உழவுச் செல்வம்
பயிருக்கும் பசிபோக்கிப் படைக்கும் வேநதன்
பாரதத்தின் தெய்வமே பணிவோம் கண்டு!

எழுதுவது : பொன்மணிதாசன்