அரக்கான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரொருவரைக் கைது செய்ததாக பங்களாதேஷ் அறிவித்தது.
பங்களாதேஷிலிருக்கும் ரோஹிஞ்யா அகதிகள் முகாம்களுக்குப் போதை வஸ்துக்களைக் கடத்துதல், அந்த முகாம்களில் வாழ்பவர்களை மிரட்டி ஆளுதல், தம்மை விமர்சிப்பவர்களைக் கொலை செய்தல் போன்றவைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் அரக்கான் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலவரொருவரைக் கைது செய்திருப்பதாக பங்களாதேஷ் அறிவித்திருக்கிறது. அரக்கான் ரோஹிஞ்யா விடுதலை இயக்கம் எனப்படும் அவ்வியக்கத்தின் தலைவர் அதவுல்லா அபு அமார் யுனூனி என்று குறிப்பிடப்படுகிறது.
பங்களாதேஷ் கைது செய்திருப்பது அபு அமார் யுனூனியின் ஒன்றுவிட்ட சகோதரனான முஹம்மது ஷா அலி ஆகும். அகதிகள் முகாமொன்றுக்கு வெளியே வைத்து முஹம்மது ஷா அலியைக் கைது செய்யும்போது அவர் கைவசம் ஆயுதங்களும், போதை வஸ்துக்களும் இருந்ததாக பங்களாதேஷ் பொலீசார் அறிக்கை குறிப்பிடுகிறது.
அபு அமார் யுனூனி தன்னுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பதாக முஹம்மது ஷா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாகவும் அவர்களின் இயக்கத்தால் கடத்தப்பட்ட ஒரு நபரைப் பொலீசார் மீட்டிருப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்