தைப்பூச காவடிச்சிந்து

சீர்மேவும் எட்டுக்குடி வாழும்
சிங்கார பாலகனே சக்தி வடிவேலா
சீராக காவடிகள் கொண்டு
சிரத்துடனே சேர்ந்திடுவோம் சந்நதியில் வந்து

பலவண்ண காவடிகள் தூக்கி
பாற்குடங்கள் செலுத்திடவே பன்னிருகை பாலா
பழந்தமிழில் சிந்தடியில் பாடி
பாதாற நடந்து வந்தோம் உன்னருளை தேடி

தைப்பூசம் காணும் மயில் முருகா
திரண்டுவரும் பக்தர்களுக் காட்சிதரும் அழகா
தப்பாமல் அருள்புரி மால் மருகா
தண்டத்துடன் கோவணத்தில் தனித்து நிற்கும் முருகா

கேட்டவரம் அளிப்பவனே குமரா
கேளாத வரங்களையும் சேர்த்தருள்வாய்  சன்முகா
கெட்டவரை அழிப்பவனே குருபரா
கெட்டியாக பிடித்துக்கொண்டோம் நின்னடியை திருகுகா

அறுபடைகள் வீடுடையாய் வேலவா
ஆற்றுபடை நாயகனே சங்கத்தமிழ் முதல்வா
அறுமுகனே திருப்புகழின் தலைவா
அருளிடுவாய் தெய்வயானை குறவள்ளி கணவா

ஒப்பற்ற அழகுடைய கந்தனே
ஓங்கார மந்திரத்தை ஓதியருள் கடம்பனே
ஒப்பில்லா கவசத்தடி நாதனே
ஒடிக்கிடுவாய் தீமைகளை குறிஞ்சிமலை வேந்தனே

மலைகளிலும் குன்றினிலும் நீயே
மனையாக கோயில் கொண்டாய் சேவற்கொடியோனே
மாலைகளை தமிழுடனே தொடுத்து
மார்பினிலே மணிகளுடன் அணிகளென படைத்தோம்

மலைநாட்டு பக்தர்களுக் கிணங்கி
மதமின்றி இனமின்றி அனைவருக்கும் அருளி
மலைப்பூட்டும் பொற்சிலையாய் நின்றாய்
மயிலோடும் வேலோடும் காட்சி தருகின்றாய்

கல்லுமலை குடிகொண்ட மணியா
கண்ணார கண்டிடுவோம் தண்ணிமலை நேசா
கல்லுகுகை பத்துமலை வாசா
களிப்புடனே பாடிவந்தோம் பழனிமலை ராசா

வெற்றிகளை வழங்கிடுவாய் வேலா
வீரத்தையும் சேர்த்திங்கு தந்திடுவாய் வேலா
கற்றிடவே ஞானத்தையும் வேலா
கொடுத்தருள்வாய் எங்களுக்கே சிவசக்தி வேலா

எழுதுவது :
அகிலா பொன்னுசாமி
மலேசியா