“ஒமெக்ரோன் பரவலைத் தாண்டும்போது ஐரோப்பா பெருந்தொற்று என்ற நிலையைக் கடக்கும்.”
ஐரோப்பியக் குடிமக்களில் 60 % ஐ ஒமெக்ரோன் திரிபு அடுத்தடுத்த மாதங்களுக்குள் தொற்றும் என்று கணிக்கப்படுகிறது. அதையடுத்து கொவிட் 19 பெருந்தொற்று என்ற நிலைமை ஐரோப்பாவில் முடிந்துவிடலாம் என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் ஐரோப்பிய உயரதிகாரி ஹான்ஸ் குளுகே பத்திரிகைப் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார்.
“சர்வதேச ரீதியில் நாம் கொவிட் 19 பெருந்தொற்றைத் தாண்ட மாதங்கள் அல்லது வருடங்களாகலாம். அதற்கான காரணம் தடுப்பு மருந்துகளை மக்கள் போட்டுக்கொண்டது அல்லது ஒமெக்ரோன் திரிபால் தாக்கப்பட்டது ஆகலாம். இவ்வருட இறுதியில் மீண்டும் இக்கிருமிகளின் பரவல் ஆங்காங்கே திரும்பி வரலாம். ஆனால், கொவிட் 19 கொடும் தொற்றாக மீண்டும் வராது என்பதே எங்கள் கணிப்பு,” என்கிறார்,குளுகே.
அமெரிக்க அரசின் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு அதிகாரி அண்டனி பௌச்சியும் அதே போன்ற எதிர்பார்ப்பை ஞாயிறன்று குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவின் சில பகுதிகளில் ஏற்கனவே பெருமளவில் மக்களைப் பாதித்த வியாதி நாட்டின் மற்றைய பகுதிகளில் தொடரலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒமெக்ரோன் திரிபு வேகமாகப் பரவுவதன் மூலம் கொவிட் 19 கிருமிகள் வெவ்வேறு வகைகளில் உருவாகலாம் என்றும் மருத்துவ ஆராய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உண்டாகும் திரிபுகளுக்கான தடுப்பு மருந்துகளை வேகமாக உற்பத்தி செய்ய வழிவகைகள் இருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துக் கொள்வனவுத் திணைக்களத் தலைவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்