அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியொன்று ஒமெக்ரோன் திரிபு அதிக ஆபத்தில்லாதது என்கிறது.

உலகில் மிகப்பெரும் எண்ணிக்கையானவர்களிடையே நடாத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று டெல்டா திரிபை விட ஒமெக்ரோன் ஆபத்தில்லாதது என்று காட்டியிருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியை 70,000 பேரிடையே நடத்தியிருக்கிறது. கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர்கள் டெல்டா அல்லது ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆராய்ச்சியின் முடிவின்படி ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் டெல்டா திரிபை விடப் பாதியளவே மருத்துவ சேவையை நாடியிருக்கிறார்கள். 75 விகிதம் குறைவாகவே அவசரகால மருத்துவம் தேவையாகியிருக்கிறது. நோயாளியாகி இறக்கும் ஆபத்து டெல்டா திரிபை விட 90 விகிதம் குறைவாக இருக்கிறது. 

முன்னர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுப் பின்னர் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டோர் கடும் நோயாளியாகும் ஆபத்திருக்கிறது. ஆனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டு ஒமெக்ரோன் திரிபால் தொற்றியவர்கள் கடுமையான நோயாளியாகவில்லை. 

இந்த ஆராய்ச்சியும் இதுவரை உலகின் பல நாடுகளிலும் கவனிக்கப்பட்டது போலவே ஒமெக்ரோன் திரிபு அதற்கு முன்னர் வந்த கொவிட் 19 திரிபுகளைவிட ஆபத்துக் குறைந்ததே என்று காட்டுகிறது. ஆயினும், மேலும் பல ஆழமான ஆராய்ச்சிகள் இதுபற்றித் தேவை என்கிறார்கள் மருத்துவ ஆராய்வாளர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்