பருத்தி நகர் துறைமுகம்
மூன்று தசாப்தங்கள்
சென்ற பின்
எமது கடலோரம் வந்திருக்கிறேன்…
எனது ஊரும்
எனது ஊரின் தெருக்களும்
இங்கு உலாவும் முகங்களும்
என்னை ஏதோ புதியவனாகப் பார்க்கின்றன…
இதோ!
இந்த அந்தி நேரத்தில்
ஆளரவம் குறையும்
ஒரு ஊமைப் பொழுதில்
எனது ஊரின் கடலோரம் அமர்ந்திருக்கிறேன்….
எந்தன் கடலும்
கடலில் துள்ளும் அலைகளும்
உடலைத் தழுவும் கடல் காற்றும் மட்டும்
என்னை நினைவு வைத்திருக்கின்றன….
‘நலமாக இருக்கிறாயா?’ என்று
ஆசையாக சுகம் விசாரிக்கிறது
கடல் காற்று காதோரம் வந்து….
தூரத்தே துள்ளி விளையாடும்
கடல் அலைகள் தமது கரங்களை அசைத்து
தமது மகிழ்வினைத் தெரிவிக்கின்றன…
‘என்ன நடந்தது?
எங்கே சென்றாய் இவ்வளவு நாளும்?’
என்று என்னை அன்புடன் வினவுகிறது
அமைதியான நீலக் கடல்….
என்னவென்று சொல்ல
எவ்விடத்தில் தொடங்கி
எவ்விடத்தில் முடிக்க….
எல்லாவற்றையும் எண்ணும் போது
கண்ணீர்த் துளிகள் கண்ணோரம் கசிந்து
கன்னத்தை நனைக்கின்றன…
கண்ணீரை மறைக்க
நான் தலையைக் குனிந்து கொள்கிறேன்….
அந்த மங்கலான அந்தி ஒளியிலும்
எனது கண்ணீர்த் துளிகளைக்
கண்டு விட்ட கடலலைகள்
ஓ! என்று இரைச்சல் போடுகின்றன….
இந்தக் கடலுடன் பேச
எனக்கு எந்தத் தடையும் இல்லை…
எப்போதும் நான் தயங்கியதும் இல்லை..
இந்தக் கடலுக்கும்
எனக்குமான பந்தம்
வரையறைகளால் சிறைப் பிடிக்கப்பட முடியாதது.
எந்த ஏட்டிலும் எழுதப்படாதது
எந்த சங்கத் தமிழ் பாட்டிலும் பாடப்படாதது
இந்தக் கடல்
ஆறுதல் கூறும் அன்னை ஆனவள்
நான் அன்பு செய்யப் பிள்ளை ஆனவள்
நான் காதல் செய்யும்
பிரிய தோழி ஆனவள்
துன்பம் வரும் போது
நல்லதோர் மந்திரி ஆனவள்
பண்பிலே தெய்வம் ஆனவள்
இவ்வாறு
அடுக்கிக் கொண்டே போகலாம்
எனது சந்தோசத்தின் சந்தம்
இந்தக் கடலலைச் சத்தங்களில்
கரைந்து போய் இருக்கிறது….
எனது கண்ணீர்த் துளிகளின் உப்பும்
இந்தக் கடல் நீரில்
கலந்து போய் இருக்கிறது…
இரவு வேளைகளில்
தன்னந் தனியனாய் இந்தக் கடலோரம்
நான் வந்து அமர்ந்த பொழுதுகளில் கூட…
இந்தக் கடல்
தனது காற்றின் கரங்களால்
வருடி வருடி என்னை சுகப்படுத்தி இருக்கிறது…
தனது அலைகள் என்ற
அழகிய கூந்தல் இழைகளால்
எனது உடல் தீண்டித் தீண்டி
சொர்க்கத்தின் சுகங்களைக் கற்றுத் தந்திருக்கிறது…
என்னவளுக்குத் தந்த
காதல் கவிதைகளை
இந்தக் கடற்கரை மண்ணில் தான்
முதன் முதலாக எழுதி எழுதிப் பார்த்துக் கொண்டேன்….
அவளுடன் பேச
வேண்டிய வார்த்தைகளை
இந்தக் கடற் காற்றில் தான் சத்தமாக
உரத்த குரலில் கூறிக் கூறி ஒத்திகை பார்த்துக் கொண்டேன்…
எமது மண்ணை மீட்கப்
போராடிய நாட்களில் இந்தக் கடலோரம் தான்
எமது தோழர்களுடன் அமர்ந்து
தாயகக் கனவினை நான் வரித்துக் கொண்டேன்…
அப்போது பேசிய வார்த்தைகள்
இப்போதும் இந்தக் கடலில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன…..
இன்னும்
எத்தனை எத்தனை கதைகள்?
பேசாப் பொருளை
பேச நான் துணிந்தேன்…
வார்த்தைகள் தாம்
வராமல் நொண்டியடிக்கின்றன..
சென்று வருகிறேன்
வென்று வருகிறேன் என்று
இறுதியாகக் கூறிச் சென்றேன்
வென்று வரவில்லை
இன்று வெறுமையாக வந்திருக்கிறேன்
இருள் கவிழ்ந்து கொண்டே வருகிறது
எல்லாத் திசைகளிலும்
காரிருள் சூழ்ந்து இருக்கிறது….
இனி என்ன?
எழுந்து வரும் முன்னர்
மீண்டும் எமது கடலைப் பார்க்கிறேன்
அலைகள் அடங்கிப் போயிருந்தன
கடல் வைத்த கண் வாங்காது
என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது….
ஒரு முறை
கட்டி அணைத்து
கண்ணீர் விட்டுக் கதறி அழ வேண்டும்
போலத் தோன்றுகிறது…
என் உயிரிலும் உணர்விலும்
ஒன்றாகி விட்ட என் கடலே!
சென்று வருகிறேன்…
காலம் மீண்டும் என்னை
எங்கோ அழைத்துச் செல்கிறது….
மீண்டும் ஒரு நாள்
உன்னிடம் வருவேன்
அப்போது சொல்கிறேன்
எந்தன் கனவு
எவ்வாறு கை தவறிப் போனது என்று…
எழுதுவது : நடா, லண்டன்