அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கெத்தாஞ்சி பிரவுன் ஜாக்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு முதல் தடவையாக ஒரு கறுப்பினப் பெண்மணியை நீதிபதியாக்கியிருக்கிறார். வழக்கம்போல நீதிபதிக்கான வேட்பாளரான அவரைப் பகிரங்கமாகப் பாராளுமன்றத்தில் விசாரித்தனர். அவ்விசாரணைக்குப் பின்னர் 53 – 47 என்ற பெரும்பான்மையில் அவர் செனட் சபை அங்கத்துவர்களால் நீதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார்.
மிட் ரோம்னி, லிசா முக்ர்கோவ்ஸ்கி, சுசான் கொலின்ஸ் ஆகிய மூன்று ரிபப்ளிகன் கட்சி செனட் சபை உறுப்பினர்களும் தமது கட்சியினர் போன்று எதிர்த்து வாக்களிக்காமல் ஜாக்ஸனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். குறிப்பிட்ட அதே மூவரும் ஏற்கனவே சில விடயங்களில் தமது கட்சியினர் பெரும்பான்மையினருடைய வழியில் செல்லாமல் டெமொகிரடிக் கட்சியின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.
அரச வழக்கறிஞராகவும் அதன் பின்னர் வாஷிங்டனில் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிய ஜாக்ஸன் 51 வயதானவராகும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளும் ஆயுள்காலத்துக்குத் தெரிவுசெய்யப்படுகிறார்கள். நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் தான் பதவி விலகப் போவதாகக் குறிப்பிட்டதை அடுத்தே ஜாக்ஸன் அப்பதவியை அடைய வழி கிடைத்திருக்கிறது.
நாட்டின் அரசியல், சமூக விடயங்கள் எந்த வழியில் போகின்றன என்பதைக் கடைசியாக முடிவுசெய்யக்கூடிய உச்ச நீதிமன்றம் மிகவும் பலம் வாய்ந்தது. எனவே அங்கே தமது பெரும்பான்மையே இருக்கவேண்டும் என்று இரண்டு கட்சியினரும் விரும்புகிறார்கள். தற்போதைய நிலைமையில் ரிபப்ளிகன் கட்சியினரின் பழமைவாத ஆதரவுக் கோட்பாடுள்ளவர்கள் 6 பேரும் டெமொகிரடிக் கட்சியினரின் தனி மனித சுதந்திர ஆதரவாளர்கள் 3 மூன்று பேரும் நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்