தமது வான்வெளி மூலம் சிரியாவுக்குப் பறக்கும் ரஷ்ய விமானங்களைத் தடை செய்தது துருக்கி.
தமது நாட்டின் வான்வெளியைப் பாவித்து சிரியாவுக்குப் பறக்கும் சகல ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதாகத் துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லெக் கவுசோகுலு சனிக்கிழமையன்று தெரிவித்தார். தாம் அதைக் கடந்த மாதமே அதை ரஷ்யாவுக்குத் தெரிவித்திருப்பதாகவும் அது இம்மாத இறுதியிலிருந்து நடைமுறைக்கு வருமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிரியாவில் நடக்கும் போரில் ரஷ்யாவும், ஈரானும் சிரியாவின் ஜனாதிபதியை ஆதரித்தன. துருக்கி சிரியாவின் அரசுக்கெதிராகப் போரிடும் சில ஆயுதக்குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. துருக்கியின் இந்த அறிவிப்பு பற்றி ரஷ்யாவிலிருந்து இதுவரை பதிலெதுவும் வரவில்லை.
துருக்கியின் முக்கிய வியாபாரத் தொடர்பு நாடுகளில் ரஷ்யா முக்கியமானது. ரஷ்யா – உக்ரேன் போரில் நடுவராகவும் இயங்கச் சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறது துருக்கி. அரசியல் பரிமாற்றத்திலும் இரண்டு நாடுகளும் தமக்கிடையே சுமுகமான உறவைக் கொண்டிருக்கின்றன.
அதைப் பாவித்துக் கடந்த மாதத்தில் ரஷ்ய – உக்ரேன் வெளிவிவகார அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தைகளைத் துருக்கி நடத்தியிருந்தது. அதற்கு அடுத்ததாக அவ்விரு நாடுகளின் ஜனாதிபதிகளையும் அழைத்து இஸ்தான்புல் மாநாடு ஒன்றில் பங்குபற்றவும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்தவும் முயற்சித்து வருவதாகவும் துருக்கிய வெளிவிவகார அமைச்சர்தெரிவித்தார். அப்படியான ஒரு சந்திப்புக்கான நிலபரம் சந்தேகத்துக்கிடமாகவே தெரிவதாகவும் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்