நான்கே வருடங்களில் ஐந்தாவது தேர்தலை நோக்கி இஸ்ராயேல் நகர்கிறது.
இஸ்ராயேலில் இறுதியாக நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியோ, அணியோ பெரும்பான்மை பெறாத நிலையில் எட்டுத் திக்குகளை நோக்கி நிற்கும், எட்டுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்தன. அரசியல் கோட்பாடுகளைப் பொறுத்தவரை எவ்வித பொருத்தமுமற்ற அந்த அணி தனது பெரும்பான்மையை இழந்து நீண்ட காலமாகிவிட்டது. ஆயினும் ஒரு வழியாக ஆட்சியை நடத்திச் சென்ற அரசு திங்களன்று தம்மால் தொடர்ந்தும் அரசை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லிப் பாராளுமன்றத்தைக் கலைக்கத் தயாராகியிருக்கிறார்கள்.
புளிக்கவைத்த ரொட்டியால் இஸ்ராயேல் அரசு தனது பெரும்பான்மையை இழந்தது. – வெற்றிநடை (vetrinadai.com)
ஆக்கிரமித்து வைத்திருக்கும், பாலஸ்தீனர்களுக்கான நிலத்தைத் திருப்பிக் கொடுக்கக்கூடாது என்று குறிப்பிடும் யூத வலதுசாரிகள் முதல் இஸ்ராயேலிடம் தமது உரிமைகளைத் தட்டிக் கேட்கும் பாலஸ்தீனர்களின் கட்சிகள் வரை கூட்டுச் சேர்ந்திருந்த ஆளும் அணியை ஒன்றுபடுத்தும் பசையாக இருந்தது நத்தான்யாஹூ மீண்டும் பதவியைக் கைப்பற்றலாகாது என்ற எண்ணமாகும். ஆனால், அதை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்ராயேலை இயக்கும் வலிமை இல்லாததால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளே தற்போது நாட்டை மீண்டும் தேர்தலை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
பாராளுமன்றத்தைக் கலைத்துவிடும் பிரதமரின் முடிவு பற்றிப் பாராளுமன்றத்தில் புதனன்று தீர்மானம் எடுக்கப்படும். அச்சமயத்தில் எதிர்க்கட்சிகளிடையே எவராவது ஒரு புதிய அரசை அமைக்கும் சாத்தியம் இருக்குமென்று கருதப்பட்டால் அதற்கான முயற்சிக்கு இடமளிக்கப்படும். அதன் மூலம் இன்னொரு தேர்தல் தற்போதைக்குத் தள்ளிவைக்கப்படலாம்.
அரசு வீழ்வதைத் தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாக முன்னாள் பிரதமர் நத்தான்யாஹு உற்சாகத்துடன் தெரிவித்தார். அவரது அறிக்கை மீண்டும் அவர் நாட்டின் பிரதமராக முயற்சி செய்யக்கூடும் என்ற கணிப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது. நத்தான்யாஹு மீது வைக்கப்பட்டிருக்கும் லஞ்ச, ஊழல் போன்றவை உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் பல. அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன, மேலும் திட்டமிடப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்