சித்திரைப் புரட்சியும் இலங்கையும் |தொடர் 2
ரணில் தனது இளவயதிலேயே அரசியலில் இறங்கி 1977 முதல் (தனது 28 வயதில்) பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் UNP ஆட்சியில் இருந்த காலங்களில் அமைச்சராகவும் மூன்று தடவைகள் பிரதமராகவும் இருந்தவர். ஆட்சியில் இல்லாத காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். ஆனால், முதன்முறையாக 2020 தேர்தலில்தான் அவரது கட்சியும் அவரும் சேர்ந்தே தோற்க நேர்ந்தது.
ஆனாலும் அவரது மாமா 45 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்த விகிதாசாரத் தேர்தல் மற்றும் தேசியப்பட்டியல் முறையில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிடைத்த ஒரேயொரு ஆசனம் அவர் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் சந்தர்ப்பத்தைத் தந்தது. அந்த ஆசனத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகி ஒரு வருடம் முடியுமுன்னரே இலங்கையில் நிலவிய குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி இடைக்காலப் பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்டார். இரண்டே மாதங்களில் இடைக்கால ஜனாதிபதியாகவும் ஆனார். அடுத்து வந்த சில நாட்களிலேயே பாராளுமன்றத்தின் ஆதரவுடன் பாரளுமன்றம் தெரிவு செய்த ஜனாதிபதியாகவும் ஆகிவிட்டார்.
ஜேஆர் அளவிற்கு இல்லாவிட்டாலும் ரணிலும் அரசியல் தந்திரங்களைச் செய்வதில் கைதேர்ந்தவர் என்றே இலங்கை அரசியல் மட்டத்தில் அறியப்பட்டவர். 1989-90 ஜே.வி.பி. காலப் பகுதியில் சிங்கள இளைஞர்கள் பட்டலந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருந்ததாகச் சொல்லப்பட்டது. 2001இல் இரண்டாம் தடவையாக பிரதமராக வந்த பின்னர் விடுதலைப் புலிகளுடன் சமாதானம் பேசச் சென்றவர் என்று கூறப்பட்டாலும் தனது தந்திரத்தால் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்திலே புலிகள் இயக்கத்தைப் பலவீனமாக்கியவர் இவர்தான் என்றும் அரசியல் அவதானிகள் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது பதவிக்கு வந்த பின்னர் பாராளுமன்ற உதவியுடன் அவசர காலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார். அதைக் கொண்டு வந்த கையோடு இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலங்களில் நடைபெற்றது போலவே அரசுக்கு எதிரானவர்கள், எதிர்காலத்தில் ஆபத்தாக மாறக் கூடியவர்களாகப் பார்த்து பார்த்துக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
சட்டத்தின் துணையோடு தந்திரமாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றியிருக்கிறார். 2015 இல் நல்லாட்சி அரசு என்று பெயருடன் மைத்திரியுடன் சேர்ந்து ஆட்சியில் இருந்தபோதுதான் இதே காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டம் செய்ய விரும்புபவர்கள் மக்களைத் திரட்டிப் போராட வசதியாக ஆர்ப்பாட்டப் பிரதேசத்தை உருவாக்கினார். இன்று அதே காலிமுகத்திடலில் போராடுபவர்களை வெளியேற்றியிருக்கிறார்.
அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களைப் பிரித்தாளும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். போராட்டக்காரர்களின் அமைதியான போராட்டத்தைத் தான் மதிப்பதாகவும் அதேநேரம் போராட்டக்காரர்களுடன் கலந்திருக்கும் வன்முறையாளர்களை இனங் கண்டு அகற்றுவது நாட்டின் தலைவராக தனது கடமையென்று கூறியிருக்கிறார். அதன் பின்னர் ஜேவிபி சார்ந்தவர்களான போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்து வருகிறார். அவர்களில் சிலரை பிணையில் விட்டாலும் சிலர் இன்னமும் தடுப்புக் காவலில்தான் இருக்கிறார்கள்.
இதைப் போலத்தான் 1983 கலவரத்தின் பின்னர் ஜேஆர் ஜேவிபி உட்பட இடதுசாரிக் கட்சிகளை தடை செய்து அரசியல் அரங்கில் இருந்து அகற்றும் வேலையைச் செய்தார். இப்போது ரணிலும் கிட்டத்தட்ட அதே பாதையில்தான் இடதுசாரிகளை அரங்கிலிருந்து அகற்றும் வேலையைச் செய்வது போலத் தெரிகிறது.
நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபாய சிங்கப்பூரில் தங்கியிருந்த காலத்தில் இலங்கைக்கு வர இலங்கை அரசு ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற குரல் இலங்கையில் எழுந்தபோது அவர் இலங்கை வருவதற்கு இது உகந்த நேரம் இல்லை என்று ரணில் உடனே தெரிவித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வார கால விசா முடிந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டபோது அவருக்கு தற்காலிக புகலிடம் கொடுக்க தாய்லாந்து சம்மதித்தது. பின்னர் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் விரும்பிய காலம் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி கிடைத்திருக்கிறது.
அதேநேரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோத்தாபாயவை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வெளியே போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது, தான் விரும்பும் காலம் வரை கோத்தாவை இலங்கைக்கு வெளியே வைத்திருக்க ரணில் செய்த ஏற்பாடா அல்லது கோத்தாவை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.
மறுபக்கத்தில் தான் ஆட்சியிலிருக்கும் காலப் பகுதியில் எதிரணி இருக்கக்கூடாது என்ற முனைப்போடு சர்வ கட்சி அரசை உருவாக்கும் வேலையில் தற்போது ரணில் ஈடுபட்டு வருகிறார். பல கட்சிகளும் ஒரு சில நிபந்தனைகளோடு ரணிலின் இந்த திட்டத்திற்கு சாதகமான முடிவுகளை எடுத்திருந்தாலும் இன்னமும் சில கட்சிகள் ரணிலின் திட்டத்துக்கு ஒத்துவரவில்லை. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படி தேசிய அரசில் இணைந்துகொள்ள விரும்பாத சிறு கட்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் இணைக்கும் வேலையிலும் ரணில் ஈடுபட்டு வருகிறார்.
மறுபுறத்தில் புலம் பெயர் சமூகம் இலங்கையில் தயக்கமின்றி முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார். அடுத்த கட்டமாக தற்போது முன்னர் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் சமூகத்தில் உள்ள சில அமைப்புகளின் தடைகளை நீக்கியதாக அறிவித்துள்ளார். இந்த அமைப்புகள் மீதான தடையை இதற்கு முன்னரும் நல்லாட்சி காலத்தில் ரணில் நீக்கினார் என்பதும் திரும்பவும் ராஜபக்ஸ அரசு அந்த அமைப்புகளைத் தடை செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இலங்கையில் கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற சில விடயங்களையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு பக்கத்தில் அனைத்துக் கட்சி அரசினை உருவாக்கி எதிர்கட்சியை அற்ற பாராளுமன்றத்தை உருவாக்க ரணில் முயற்சிக்கிறார். இதன் மூலம் அடுத்து வரும் சில வருடங்களுக்கு அரசின் திட்டங்களை எதிர்ப்புகள் குறைவான பாராளுமன்றின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது ரணிலில் திட்டமாக இருக்கக்கூடும்.
மறுபுறத்தில் அதேநேரம் வெளிநாட்டுக் கடனுதவிகள், IMF திட்டங்களுடன் நீண்டகால முதலீடுகளும் வந்தால் மட்டுமே இலங்கை இப்போதுள்ள நிலையிலிருந்து பொருளாதார ரீதியாக மீள முடியும். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்னர் புலம்பெயர் சமூகத்தை நோக்கி இலங்கையில் முதலிட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் எனக் கொள்ளலாம். சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர் மீதான தடை நீக்கமும் இதன் பகுதியாக இருக்கலாம்.
மூன்று வாரங்களுக்கு இலங்கையில் ஊடகங்கள் முன் தோன்றிய ஒரு ஆஸ்திரேலியா தமிழர், பத்து வருடங்களுக்கு முன்னர் வடக்கில் பெரும் முதலீடு செய்ய முயன்ற தன் அனுபவத்தைப் பகிர்ந்து வடக்கில் அதிகாரிகள் சரியில்லை. தெற்கில் முதலீடு செய்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது இலகுவானது என்று கூறியிருந்தார். அதற்கு சில நாட்கள் கழித்து வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாணத்தில் திறமையற்ற அதிகாரிகள் இருப்பதாகவும் அவர்கள் தாமாகவே பதவி விலகிவிடுவது நல்லது என்றும் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டார்.
அதற்கு பின்னர், தேசிய மட்டத்தில் அரசுடன் இணையப் பின் நின்ற கட்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இணையும்படி ரணில் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு புள்ளியில் குவிவது போலவே தெரிகிறது. அதாவது, வடக்கு, கிழக்கில் மாகாண சபை அமைப்பினூடாக நேரடி வெளிநாட்டு முதலீட்டைச் செய்வது வினைத்திறன் அற்றதாகவே முடியும் என்று நிறுவ ரணிலின் அரசு முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
மாவட்ட மட்டத்தில் உள்ள கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும் மாகாண சபை அமைப்பை பலவீனப்படுத்துவதன் மூலமும் மாகாண சபையை இல்லாது ஒழிக்க செய்யப்படும் முயற்சி இதுவோ என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது.
(தொடரும்….)
எழுதுவது : வீமன்