கோடையின் பாதிவரை கடந்த வருடத்தைவிட நாலு மடங்கு அதிக காட்டுத்தீக்களை சந்தித்தது ஸ்பெய்ன்.
ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் இந்தக் கோடைகாலத்தின் உக்கிரமான வெப்பநிலை பற்றியும் அதன் விளைவுகளில் ஒன்றான காட்டுத்தீக்கள் பற்றியும் செய்திகள் தினசரி வந்துகொண்டிருக்கின்றன. இக்கோடையின் காட்டுத்தீக்காலம் பாதியளவே கடந்த நிலையில் ஸ்பெய்ன் மட்டும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நாலு மடங்கு அதிக எண்ணிக்கையில் காட்டுத்தீக்களைக் கண்டிருக்கிறது.
வரட்சியும், கடுமையான வெப்ப அலையும் மத்தியதரைக்கடலையடுத்துள்ள பிராந்தியம் முழுவதையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்திருக்கிறது. பிரான்ஸ், போர்த்துக்கால், கிரீஸ் ஆகிய நாடுகள் ஸ்பெய்னைப் போலவே இவ்வருடம் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. குட்டி நாடான ஸ்லோவேனியா பல தலைமுறைகள் காணாத அளவில் காட்டுத்தீக்களை எதிர்கொண்டிருக்கிறது.
இக்கோடையில் ஸ்பெய்ன் இதுவரை பெரிய அளவிலான 43 காட்டுத்தீக்களை அனுபவித்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட நாலு மடங்கு அதிகமானது என்பதுடன் கடந்த தசாப்தத்திலேயே அதிக எண்ணிக்கையிலானதாகும். இத்தீக்களால் அழிக்கப்பட்ட பிரதேசம் 261 930 ஹெட்டேர் ஆகும். காட்டுத்தீக்களைக் கண்காணிக்கும் ஐரோப்பிய நாடுகளின் அதிகாரத்தின் விபரங்களின்படி ஸ்பெய்ன் அடைந்தளவு இழப்பை எந்த ஐரோப்பிய நாடும் அனுபவிக்கவில்லை.
வடமேற்கு ஸ்பெய்னில் ஞாயிறன்று அதிகாலையில் ஆரம்பித்த காட்டுத்தீயொன்று 24 மணி நேரத்தில் சுமார் 8,000 ஹெட்டேர் பிராந்தியத்தை அழித்திருக்கிறது. அதையடுத்த பிரதேசத்திலிருந்து சுமார் 1,500 பேர் பாதுகாப்புக் கருதி வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள். குறிப்பிட்ட அந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 300 தீயணைப்புப்படையினர் விடாமல் போராடினார்கள் என்று அப்பகுதியின் மீட்புப் படையினர் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்