பதவி விலகும் ஜனாதிபதியின் ஆதரவைப் பெற்றும்கூட மீண்டும் தேர்தலில் தோற்றார் ரைலா ஒடிங்கா.
சில நாட்களுக்கு முன்னர் கென்யாவில் நடந்த தேர்தலில் முன்னாள் உப ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ மயிரிழையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து 1997 முதல் ஐந்து தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட ரைலா ஒடிங்கா 48.85 % வாக்குகளைப் பெற்றிருந்தார். வெற்றியடைந்த ரூட்டோ 50.49 % வாக்குகளைப் பெற்றதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
கென்யாவின் ஜனாதிபதியாக இருந்த உஹுரு கென்யட்டா இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்ததால் மூன்றாவது தடவையாகப் போட்டியிடவில்லை. அவர் தன்னிடம் தேர்தல்களில் தோற்றுப்போன எதிர்க்கட்சிக்காரரான ரைலா ஒடிங்காவுக்குத் தனது ஆதரவைக் கொடுத்திருந்தார்.
ஜனாதிபதியாக இருந்தவரின் ஆதரவைப் பெற்ற ஒடிங்காவே வெல்வார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் தேர்தல் வெற்றி அவருக்குக் கிடைக்காததால் தேர்தல் முடிவுகளை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். தான், தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதை உச்ச நீதிமன்றம் செல்லுபடியில்லாததாகப் பிரகடனம் செய்யவேண்டும் என்றும் ஒடிங்கா கோரியிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் ஏழு அங்கத்தவர்களில் நால்வர் தமது கருத்துப்படி வாக்குகள் எண்ணப்பட்டதில் குறைகள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளைத் தாம் அதனால் ஒத்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேடையில் தேர்தல் முடிவுகளைத் தெரிவித்த ஆணையத்தின் தலைவர் ஆளுனர் ஒருவரால் தாக்கப்பட்டார். மேடையில் கலவரம் உண்டாகி மற்றைய அங்கத்தவர்களும் தாக்கப்பட்டனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயகம் ஓரளவாவது செயற்பட்டு வரும் நாடாக கென்யா கருதப்படுகிறது. 2010 இல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சாசனப்படி இதுவரை மூன்று தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவைகளின் பின்னர் கிளர்ச்சிகள் ஏற்பட்டாலும் வாக்களித்தல், வாக்குகளை எண்ணி அறிவித்தல் ஆகியவை பொதுவாகச் சரியான முறையில் நடந்தேறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்த தேர்தலின் வாக்கு எண்ணி அறிவித்தலும் எல்லோருக்கும் தெரியக்கூடியதாகவே நடந்தேறியதாகப் பெரும்பாலான செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் வெற்றிபெற்ற வில்லியம் ரூட்டோ தனது முதலாவது உரையில் நாட்டு மக்களை ஒன்றுபடும்படியும், நடந்தவைகளை பின்னால் தள்ளிவிட்டு முன்நோக்கிச் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிக்காரர்களைப் பழிவாங்கும் எண்ணம் தனக்கில்லை என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஜனநாயக ரீதியாகத் தான் ஆட்சி செய்வேன் என்றும் அவர் உறுதி கூறினார்.
சாள்ஸ் ஜெ. போமன்