பசுபிக் சமுத்திரத்தில் தனக்கருகிலிருக்கும் நாடுகளின் பாதுகாப்பு, சூழல் பேண ஆஸ்ரேலியா நிதி ஒதுக்குகிறது.
சமீபத்தில் ஐ.நா-சபையில் தனக்கு அருகிலிருக்கும் தீவுகளின் சூழல் மோசமாகுவதில் ஆஸ்ரேலியாவின் பங்கு பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. நீர்மட்டம் வேகமாக உயர்வதால் அந்தத் தீவுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பதவிக்கு வந்த ஆஸ்ரேலிய அரசு அத்தீவுகளின் பாதுகாப்பு, சூழல் மேம்பாடுகளுக்காக சுமார் 565 மில்லியன் டொலர்களை வரவிருக்கும் நான்கு வருடங்களில் செலவிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
பிரென்ச் பொலினேசியாவில் நடந்துவரும் Pacific Way Conference மாநாட்டில் பங்குபற்றும் ஆஸ்ரேலிய வெளிவிவகார அமைச்ச பென்னி வோங் தமது பிராந்திய உதவித் தொகையாக வரும் நான்கு ஆண்டுகளில் செலவிட மொத்தமாக சுமார் 878.3 மில்லியன் டொலர்களைச் செலவிடவிருப்பதாக அறிவித்தார். அழிந்துவரும் தீவுகளில் நிலைமை மேம்படுத்தப்படுவது முதல் சாலமொன் தீவுகளின் பொலீஸ் பாதுகாப்பு உட்படப் பாதுகாப்பு, காலநிலை மாற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள அத்தொகை செலவிடப்படும் என்றார் அவர்.
சாலமொன் தீவுகள் உட்பட பல குட்டி நாடுகளுக்கு உதவி சீனா அப்பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை அதிகரிக்க முற்படுவதை எதிர்கொள்ளவே ஆஸ்ரேலியா தனது உதவித்தொகையை அதிகரித்திருக்கிறது. சாலமொன் தீவுகளின் பொலீஸ் அதிகாரத்துக்கான தொகையாக மட்டும் சுமார் 29 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பசுபிக் பிராந்தியத்தின் வான்வெளிக் கண்காணிப்புக்காக 19 மில்லியன் டொலர்கலும், தனது எல்லைப்பாதுகாப்புப் படையைப் பலப்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலர்களையும் ஆஸ்ரேலியா ஒதுக்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்