இசைநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கொன்றது மியான்மார் இராணுவம்.
மியான்மாரின் மாநிலங்களில் ஒன்றான வடக்கிலிருக்கும் கச்சின் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதன் மீது மியான்மார் இராணுவத்தின் மூன்று விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தின. அத்தாக்குதலில் பார்வையாளர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் உட்பட சுமார் 60 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சாட்சிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மியான்மார் அரசைக் கவிழ்த்த இராணுவம் அதைத் தன் கையிலெடுத்ததை ஏற்காது மக்களில் பலர் ஆங்காங்கே அதை எதிர்த்து வருகிறார்கள். கச்சின் இனத்தினரின் விடுதலை இராணுவம் மியான்மார் இராணுவத்தை எதிர்த்து ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த இயக்கத்திரே குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுமார் 500 – 600 பேர் அங்கே பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கும்போது அத்தாக்குதல் நடைபெற்றது. அப்போராளிகளில் சிலரும் இறந்திருக்கிறார்கள்.
கச்சின் மாநிலத்தில் நடந்ததாகக் குறிப்பிடப்படும் தாக்குதலுக்குக் காரணம் அந்தப் போராளிக் குழுவினர் மியான்மார் இராணுவம் மீது தாக்கி வருவதே என்கிறது இராணுவ ஆட்சி. மியான்மாரின் அரசாங்கம் மீது எதிர்ப்பைக் காட்டி வருபவர்கள் மீது இராணுவம் இரும்புக்கரங்களையே பிரயோகித்து வருகிறது. இதே போன்ற பல தாக்குதல்களையும் இராணுவம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. கச்சின் பிராந்தியத்தில் நடந்த தாக்குதல் அவைகளில் மிகவும் கொடூரமானது என்று என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்