ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே அமெரிக்காவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள்.
ஆஸார்பைஜானின் பிராந்தியமான நகானோ – கரபாக் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் இடையே ரஷ்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகக் கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. தமது எல்லையில் இராணுவ மோதல்களைச் சந்தித்த அவ்விரு நாட்டின் தலைவர்களும் புத்தின் தலைமையில் சமாதானம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார்கள். தற்போது அவ்விரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வோஷிங்டனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புத்தினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஆர்மீனியப் பிரதமர் ஈரானுக்குச் சென்று ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியச் சந்தித்தார். ஆர்மீனியாவின் பகுதியான காகசஸ் பிராந்தியம் ஈரானுடைய சரித்திரத்துடன் இணைந்திருக்கிறது. அத்துடன் வெவ்வேறு மதத்தைக் கொண்டவர்களாயினும் ஆர்மீனியாவும், ஈரானும் நெருங்கிய கூட்டுறவைக் கொண்டிருக்கிறார்கள். நகானோ – கரபாக் தகராறுகளில் அங்கே வாழும் ஆர்மீனியர்களை ஈரான் ஆதரிக்கிறது.
ஆர்மீனியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஈரான் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஆர்மீனிய, ஆஸார்பைஜான் பிரச்சினைக்கான தீர்வு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வாழும் மக்களாலேயே உண்டாக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. வெளியார் எவரும் அப்பிரச்சினைகளில் தலையிடுவதை ஈரான் விரும்பவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆர்மீனியாவுக்கும், ஆஸார்பைஜானுக்கும் நட்பாக அமெரிக்கா இருப்பதாகவும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் அவ்விரு தரப்பாரும் தம்மிடையேயுள்ள பிரச்சினைகளைத் தைரியமாக அணுகித் தீர்ப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் அந்தோனி பிளிங்கன் குறிப்பிட்டார். இரண்டு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னாலேயே நடந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்