“இமாலயப் பிராந்தியத்தில் காட்டமான நிலநடுக்கம் ஒன்றுக்குத் தயாராக இருங்கள்,” என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அருணாச்சல் பிரதேசத்தில் இன்று காலையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பூமியதிர்ச்சி ஏற்ற்பட்டிருப்பதாக நில அதிர்வுகளைக் கண்காணிக்கும் இந்தியாவின் தேசிய இலாகா தெரிவித்தது. அந்த அதிர்வின் அளவு 5.7 புள்ளிகள் என்று குறிப்பிடப்படுகிறது. புதனன்று நேபாளத்தில் டோட்டி பகுதியில் ஏற்பட்ட 6.3 புள்ளி நிலநடுக்கத்தின் பின்னர் இது ஏற்பட்டிருக்கிறது. அது சுமார் 15.7 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டிருந்தது.
நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் பல கட்டடங்கள் இடிந்து ஆறு பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் உண்டாகியிருக்கும் அழிவுகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
யூராசியா நிலத்தட்டும் இந்திய நிலத்தட்டும் மோதிதன் விளைவால் இமாலய மலைப்பிராந்தியம் உருவாகியது. அந்த மோதல் தொடர்ந்தும் ஏற்பட்டு வருவதால் இந்தியாவின் பிராந்தியம் இருக்கும் யூராசியன் நிலத்தட்டுக்குக் கீழே தொடர்ந்து நீண்ட காலமாக பெரும் சக்தி சேமிக்கப்பட்டு வருகிறது. அதனால் யூரோசியா நிலத்தட்டுப்பகுதி தன்மீது இருக்கும் இந்திய நிலத்தட்டை உந்திவருகிறது. அதை நில அதிர்வுகளைக் கண்காணித்து வரும் கருவிகள் தெளிவாகக் காட்டி வருகின்றன.
நிலத்தட்டுகளின் கீழே நீண்ட காலமாகத் தொடரும் ஸ்திரமற்ற நிலைமையும், உந்து சக்தியும் சேர்ந்து சுமார் 200 வருடங்களில் கண்டிராத நிலநடுக்கங்களை இமாலயப் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் சாத்தியம் தெரிகிறது, என்று இமாலய நில திர்வுகளைக் கணித்து ஆராயும் அமைப்பின் தலைமை விஞ்ஞானி அஜய் போல் தெரிவித்திருக்கிறார்.
“நிலத்தட்டுக்களின் கீழ் ஏற்படும் மாற்றங்களினால் வெளியேற்றப்படும் சக்தி நிலநடுக்கங்களை ஏற்படுத்துவது இயற்கையானது. எனவே தயாராக இருங்கள், நிலைமை ஏற்படும்போது அதைக் கையாளும் பயிற்சிகளை நடத்துங்கள். பூகம்பத்தை எதிர்க்கும், சேதங்களைக் குறைக்கும்படியான கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஷில்லாங்கில் 1897 இல், காங்க்ராவில் 1905 இல், பீகார்-நேபாளத்தில் 1934 இல் மற்றும், 1950ல் அஸ்ஸாமிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் உட்பட, கடந்த 150 ஆண்டுகளில் இமயமலைப் பகுதியில் நான்கு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
சாள்ஸ் ஜெ. போமன்