இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் வளரும் நாடுகளுக்கு உதவத் தயார் என்கிறது சீனா, COP27 காலநிலை மாநாட்டில்.
பணக்கார நாடுகள் வளரும் நாடுகளில் ஏற்படும் இயற்கை அழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுதல் எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27 மாநாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. பணக்கார நாடுகள் நீண்ட காலமாகத் தமது நடவடிக்கைகளால் புவியில் ஏற்படுத்தியிருக்கும் காயங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வறிய மற்றும் வளரும் நாடுகளே என்று ஒப்புக்கொள்வதைப் பிரதிபலிப்பதாகவே அந்த நடவடிக்கை குறிக்கிறது. அப்படியான உதவிகளைத் தாமும் செய்ய ஆர்வமாக இருப்பதாகச் சீனாவின் பிரதிநிதி ஷீ ஷென்குவா மாநாட்டில் தனது உரையின்போது தெரிவித்தார்.
கொடுப்பவருக்கும், பெற்றுக்கொள்பவருக்கும் வெவ்வேறு பொறுப்புக்களை நிறைவேற்றுவதாக இருக்கும் அந்த உதவித் திட்டங்கள் எப்படிச் செயற்படவேண்டும் என்பது பற்றிய பொறிமுறையை முதலில் தயார் செய்துகொள்ளவேண்டும் என்று ஷீ ஷென்குவா சுட்டிக் காட்டினார். அப்படியான தீர்வுக்கான விவாதங்களில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் மற்றவர்களை விட அதிகமான பொறுப்பு ஏற்கவேண்டும் என்று குறிப்பிடுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அவர் சகலருக்கும் ஏற்புடைய ஒரு பொறிமுறையின் அவசியத்தைச் சுட்டிக் காட்டினார்.
சீனா தவிர்ந்த வளரும் நாடுகள் 2030 வருடம் வரை சுமார் 2 திரில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான முதலீடுகளைக் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காகச் செலவிடவேண்டியிருக்கும் என்று ஐ.நா – வின் பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார். அதில் சுமார் 1.4 திரில்லியன் டொலர்கள் பணக்கார நாடுகளின் உதவித்தொகையாகக் கொடுக்கப்படவேண்டும் என்பது முன்மொழியப்பட்டுள்ளது. மிச்சத் தொகையை வளரும் நாடுகள் அரச, தனியார் முதலீடுகளால் பெற்றுக்கொள்ளவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்