ரஷ்யாவின் தானியங்கள், உரவகைகளை ஏற்றுமதிக்குக் கதவுகளைத் திறக்க ஐ.நா – வுடன் பேச்சுவார்த்தை.
கருங்கடல் துறைமுகங்கள் வழியே உக்ரேன் தனது தானியங்களை ஏற்றுமதி செய்ய ஐ.நா, துருக்கி ஆகியோரின் நடுநிலைமையில் ரஷ்யா அனுமதித்திருப்பதால் உலகின் வறிய நாடுகளின் உணவுத்தேவைக்குச் சமீப காலத்தில் ஓரளவு தானியங்கள் கிடைத்து வருகின்றது. அந்த ஒப்பந்தத்தை ரஷ்ய தானியங்கள், உரங்கள் ஆகியவையையும் ஏற்றுமதி செய்யக் கூடியதாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுவிஸ், ஜெனிவாவில் ஆரம்பித்திருக்கின்றன.
உக்ரேன் தனது தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களைத் தாக்காமல் கருங்கடல் வழியே அனுமதிப்பதற்கு ரஷ்யா ஒத்துக்கொண்ட காலக்கெடு முடிவடைகிறது. அதன் இரண்டாவது கட்டமாக அந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் ஏற்றுமதிக்கும் உலகச்சந்தையில் தடையிருக்கலாகாது என்று ரஷ்யா முன்னர் குறிப்பிட்டிருந்தது. அதைப் பற்றிய விபரங்களை வரைந்துகொள்ளவே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சனிக்கிழமை இரவு வெளியான செய்திகளின்படி ரஷ்யா அந்த ஒப்பந்தம் தொடர்வது பற்றிய பச்சைக் கொடியைக் காட்டவில்லை.
பேச்சுவார்த்தைகளை நடத்த ரஷ்யாவின் உப வெளிவிவகார அமைச்சர் செர்கெய் வெர்ஷினின் தலைமையிலான ஒரு குழு சுவிசுக்கு வந்திருக்கிறது. ஐ.நா -வின் சார்பில் அமைப்பின் வர்த்தக நிர்வாகி ரெபெக்கா கிரின்ஸ்பன், மாட்டின் கிரிபித் ஆகியோர் பங்குபற்றுகிறார்கள். உக்ரேன் மட்டுமன்றி ரஷ்யாவும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலமே உலகில் ஏற்பட்டிருக்கும் உணவுத்தட்டுப்பாடு, விலையேற்றம் போன்றவைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்று ஐ.நா – வின் பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள்.
உரவகைகளைப் பொறுத்தரவரை ரஷ்யா மட்டும் உலகின் 15 விகிதச் சந்தைக்குப் பொறுப்பாக இருக்கிறது. ரஷ்யாவும் உக்ரேனும் சேர்ந்து உலகின் 50 விகித சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி, 20 விகிதமான சோளம், 30 விகிதமான கோதுமை, பார்லி போன்ற தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்