இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.
திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப் பங்குகொள்ளவிருக்கிறார். உக்ரேன் – ரஷ்யா போரினால் ஏற்பட்டிருக்கும் சர்வதேசச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அங்கே மோடி உலகத் தலைவர்களுடன் கலந்தாலோசிப்பார் என்று இந்திய அரசின் பத்திரிகையாளர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஜோ பைடனும் சந்திக்க முன்னர் அவற்றில் முடிவெடுக்கவிருக்கும் முக்கியமான விடயங்களைப் பற்றி கம்போடியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டின் ஒரு பக்கமாக இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஞாயின்றன்று சந்தித்துப் பேசிக்கொண்டனர். அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மொஸ்கோ சென்று ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவுடன் கலந்தாலோசித்தார். சனிக்கிழமையன்று அவர் கம்போடியாவில் உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் டிமித்ரோ குலேபாவுடனும் பேசினார்.
ஆஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம், ஆர்ஜென்ரீனா, பிரேசில், கனடா, சவூதி அரேபியா, மெக்சிக்கோ, தென் கொரியா, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி ஆகிய நாடுகளின் குழுமமே ஜி 20 ஆகும். தற்போது அதன் தலைமையை இந்தோனேசியா ஏற்றிருக்கிறது. இவ்வருட முடிவில் இந்தியா அந்த நாடுகளின் தலைமையை ஏற்றுக்கொள்ளவிருக்கிறது.
உலகின் 85 % பொருளாதார மதிப்பு, 75 % சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றைத் தங்களுக்குள் கொண்டிருக்கும் ஜி 20 நாடுகளில் உலகின் மூன்றிலிரண்டு பங்கு மக்கள் வாழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்