பல மாதங்களாக ஊதிப் பெருக்கவைத்த ஆர்வத்தை வழியவிட்டு மீண்டும் ஜனாதிபதி போட்டியில் குதிப்பதை வெளியிட்டார் டிரம்ப்.
தனது ஆதரவாளர்களுக்குக் கடந்த வாரம் “மிக முக்கியமான செய்தியொன்றை அறிவிக்கப் போகிறேன்,” என்று தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் டொனால்ட் டிரம்ப். கூட்டியிருந்த தனது விசிறிகளின் ஆரவாரங்களுக்கு நடுவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தன்னை அறிவித்திருப்பதாக அவர் அறிவித்தார்.
ஒரு வாரத்துக்கு முன்னர் வரை இருந்த நிலைமை அவரது ரிபப்ளிகன் கட்சிக்குள்ளும், அவரது விசிறி ஊடகங்களுக்குள்ளும் மாறியிருக்கிறது. 2020 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியைக் களவாடியதாக அவர் குறிப்பிட்டு வருவதைத் தொடர்ந்தும் நம்பிவரும் அவரது ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரோ அவர் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
வெளியாகியிருக்கும் நடுத்தவணைத் தேர்தலின் முடிவுகள் டிரம்ப் ஆதரவு வேட்பாளர்கள் பலரை மண் கவ்வ வைத்திருக்கிறது. அவரைப் போலவே தேர்தல் வெற்றி பறிப்பு, தேர்தல் முறையில் ஓட்டைகள் என்று குறிப்பிட்டு வந்த வேட்பாளர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலன்றி பாராளுமன்றத்தின் செனட் சபையை ஏற்கனவே டெமொகிரடிக் கட்சியினர் கைப்பற்றி விட்டார்கள். பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்பார்த்த ரிபப்ளிகன் கட்சியினருக்கு இதுவரை 217 இடங்களும், டெமொகிரடிக் கட்சியினருக்கு 209 இடங்களும் கிடைத்திருக்கின்றன. மீதமிருக்கும் இடங்களில் ரிபப்ளிகன் கட்சியினர் வென்றாலும் அவர்களுடைய பெரும்பான்மை மயிரிழையிலேயே இருக்கும்.
நடந்த தேர்தலில் டெமொகிரடிக் கட்சியினரே தமது தோல்வியை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததை விடக் குறைந்த பாதகமே ஏற்பட்டிருப்பதை அவர்கள் வெற்றியாகவே கருதுகிறார்கள். ரிபப்ளிகன் கட்சியினருக்கு தேர்தல் முடிவுகள் ஒரு மூக்குடைப்பு ஆகும். அதன் தலைவர்கள் பலரும் பகிரங்கமாகக் கடந்த நாட்களில் டிர்ம்ப் தான் தமது தோல்விக்கான முக்கிய காரணம் என்று விரல் விட்டுக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்