“போலந்தில் விழுந்த குண்டு எங்கள் மீது குறிவைத்த தாக்குதலாகத் தெரியவில்லை” – போலந்து ஜனாதிபதி.
செவ்வாயன்று உக்ரேனை அடுத்துள்ள போலந்தின் எல்லைக்குள் விழுந்து வெடித்த குண்டு இருவரின் உயிரைக் குடித்தது. அக்குண்டு ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பல மணி நேரம் உலகைக் கலங்க வைத்தது. நாட்டோ நாடு தாக்கப்பட்டதால் சக அங்கத்துவ நாடுகள் போரில் இறங்குமா, அதனால் உக்ரேன் மீதான போர் வியாபித்து மேலும் அழிவுகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துமா போன்ற கேள்விகள் காற்றின் ஒவ்வொரு அணுவிலும் பரவின.
ஆரம்பத்தில் அக்குண்டு ரஷ்யாவால் தான் வீசப்பட்டிருக்கும் என்று ஊகித்து நாட்டோவின் சக நாடுகளை ஒன்று கூட்டியது போலந்து. ஐ.நா – வின் பாதுகாப்புக் குழுக் கூட்டமும் அவசரமாகக் கூட்டப்பட்டது. திட்டவட்டமாகப் போலந்து ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டாவிட்டாலும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அது தம்மால் போலந்தின் மீது வீசப்படவில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
குண்டின் வீசப்பட்ட வழியை ஆராய்ந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் மூலமாக அக்குண்டு உக்ரேனிலிருந்து வந்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடன் குண்டு பற்றிய தனது முதலாவது கருத்திலேயே, “அதன் வழியைக் கவனிக்கும்போது அது ரஷ்யாவின் பிராந்தியத்திலிருந்து வந்ததாகத் தெரியவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வழியாக ஏவுகணைக் குண்டு பற்றிய மேலதிக ஆராய்வுகளின் பின்னர் போலந்து ஜனாதிபதி ஆந்திரே டூடா, “போலந்தில் விழுந்த குண்டு உக்ரேனிலிருந்து வந்திருக்கும் சாத்தியமே தெரிகிறது,” என்றார். அமெரிக்க உளவு அமைப்பினரின் ஆரம்பக் கூற்றுப் போலவே ரஷ்யாவின் ஏவுகணைகளை எதிர்க்க உக்ரேனால் செலுத்தப்பட்ட பாதுகாப்புத் தாக்குதலால் திருப்பப்பட குண்டு அல்லது உக்ரேன் தன்னைப் பாதுக்காக்க ரஷ்யாவின் ஏவுகணையைச் சுட்ட போது பறந்த குண்டுதான் போலந்தில் விழுந்திருக்கச் சாத்தியம் என்று தெரியவருகிறது.
போலந்தில் விழுந்த குண்டு பற்றிய அமெரிக்காவின் கையாளலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு பாராட்டியிருக்கிறது. எடுத்தவுடன் எங்களைக் குற்றஞ்சாட்டாமல் ஆராய்ந்து பார்த்துப் பொறுப்புடன் செயற்பட்ட அமெரிக்க தரப்புக்கு மதிப்புக் கொடுப்பதாக ரஷ்ய அரசின் வெளிவிவகாரத் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்