கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் சேரக்கூடியத் தகைமைகளைக் காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டு அவைகளை வரவேற்றார். அதற்கான உத்தியோகபூர்வமான முடிவு ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களால் வரும் டிசம்பர் 08 ம் திகதி எடுக்கப்படும்.
ஷெங்கன் கூட்டுறவு அமைப்பிலிருக்கும்[Schengen Area] நாடுகளுக்கு இடையே பயணிக்க அந்த நாட்டவர்களுக்கு விசாவோ, கடவுச்சீட்டோ தேவையில்லை. எல்லைகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி கடக்கும் வசதி குறிப்பிட்ட நாடுகளுக்கிடையேனான பிரயாணங்களையும், வர்த்தகங்களையும் இலகுவாக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் ஷெங்கன் ஒப்பந்தம் 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்