அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றிய ரிபப்ளிகன் கட்சியினர்.
தேர்தல் நடந்து ஒரு வாரத்துக்கும் அதிகமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன அமெரிக்காவில். அமெரிக்காவின் அரசியல் உலக நாடுகளெங்குமே தனது அலைகளைப் பரப்பும் என்பதால் அதன் பாராளுமன்றச் சபைகள் எந்தக் கட்சியின் கையில் அகப்படுகிறது என்பதை உலகமே கவனிக்கிறது. செனட் சபையை டெமொகிரடிக் கட்சி 1 இட வித்தியாசத்தல் கைப்பற்றியிருக்கிறது. பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றுவதற்குத் தேவையான 218 இடங்களை எதிர்க்கட்சியான ரிபப்ளிகன் கட்சியினர் கைப்பற்றியிருப்பது தெரியவருகிறது.
பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்களில் ஆறு இடங்களின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. டெமொகிரடிக் கட்சியினர் மொத்தமாக 210 இடங்களையே பெற்றிருக்கிறார்கள். பெரும்பான்மையை 218 இடங்களால் கைப்பற்றியிருக்கும் ரிபப்ளிகன் கட்சியினர் மேலும் எத்தனை இடங்களைப் பெறக்கூடுமென்பது தெளிவாகவில்லை. எப்படியாயினும் வாக்குகள் எண்ணப்படும் இடங்கள் சிலவற்றில் அவர்கள் பின் தங்கியிருப்பதால் மிகக் குறைந்த பெரும்பான்மையையே அவர்கள் பெறுவார்கள் என்பது தெரியவருகிறது.
காலநிலை மாற்றத்தைத் தடுத்தல், புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்திருந்த மிகப் பெரிய அரச முதலீடுகளை நிறைவேற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடலாம். அத்துடன் ஜோ பைடன் குடும்பத்தினர் மீது விசாரணை, கொரோனாக் கால நடவடிக்கைகள் மீது விசாரணை, உக்ரேனுக்கான உதவிகள் பற்றிய கட்டுப்பாடுகள் போன்றவை ரிபப்ளிகன் கட்சியினரால் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்