நாட்டின் 102 வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 600 பேரை விடுதலை செய்தது இராணுவ அரசு.
“மியான்மாரில் வாழும் அனைத்து மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அவர்களின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தேசிய பண்புகளை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும், வலுவான மற்றும் ஆற்றல்மிக்க ஒன்றிய உணர்வை, உண்மையான தேசபக்தியின் உணர்வை உறுதி செய்ய சகல குடிமக்களுக்கும் சுகாதாரம், உடற்பயிற்சி மற்றும் கல்வி வசதிகளை ஏற்றத்தாழ்வின்றிக் கொடுக்க அரசு கொடுக்கிறது,” என்று ஆரம்பிக்கிறது மியான்மார் இராணுவ அரசின் தேசிய தினச் செய்தி.
மியான்மாரின் வெவ்வேறு மாநிலங்கள் ஒன்றுபட்டு நாட்டைக் கைப்பற்றி ஆண்ட அன்னியர்களை வெளியேற்றி ஒன்றுபட்டதை அந்த நாட்டின் தேசிய தினமான நவம்பர் 17 திகதியில் நினைவுகூருகிறார்கள். அதையொட்டின் மக்கள் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத் தளபதி மின் ஔ இலியாங் சுமார் 600 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார். அவர்களில் நால்வர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகும்.
மியான்மாருக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதுவரான விக்கி பௌமானும் அவரது பர்மீயக் கணவர் ஹிதெய்ன் லின் ஆகியோர் அவர்களில் இருவராகும். 2002 – 2006 காலகட்டத்தில் நாட்டின் தூதுவராக இருந்த அவர் அங்கே 30 வருடகாலம் வாழ்ந்தவராகும். செப்டெம்பரில் அவரும் கணவரும் கைதுசெய்யப்படக் காரணம் அவர்கள் தாம் குறிப்பிட்ட விலாசத்தில் வாழாமல் வேறிடத்தில் வாழ்ந்தார்கள் என்பதாகும். மியான்மாரில் நல்ல நெறிமுறையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது பற்றிய கல்வியைக் கொடுக்கும் அமைப்பொன்றை பௌமான் நடத்தி வந்தார்.
ஜப்பானிய சினிமா தயாரிப்பாளர், இயக்குனரான தூரு குபோட்டா, ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த ஷொர்ன் டெர்னல், மற்றொரு அமெரிக்கரும் விடுதலை செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆவணப் படங்களைத் தயாரிக்கும் குபோட்டா நாட்டில் இராணுவ ஆட்சி நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றிய படத்துக்காக மக்கள் நடவடிக்கைகளைப் படமெடுத்தபோது கைது செய்யப்பட்டார். டெர்னல் ஒரு பொருளாதாரப் பேராசிரியராகும். அவர் நாட்டின் இரகசியங்களை வெளியிட்டு குடிவரவுச் சட்டங்களுக்கு எதிராக நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
ஔன் சான் சூ ஷீ அரசைக் கவிழ்த்த மியான்மார் இராணுவம் அதை எதிர்த்தவர்கள் என்று கைதுசெய்து சிறைவைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 16,500 என்று குறிப்பிடப்படுகிறது. அவர்களில் சுமார் 2,500 கொலை செய்யப்பட்டார்கள்.
ஔன் சான் சூ ஷீ மீது அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள் போடப்பட்டு அவைகளில் சிலவற்றுக்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் அவர் மீதான தண்டனையாக சுமார் 20 வருடச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வருடங்களுக்கான சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் அவர் மீது சாட்டப்பட்டிருக்கின்றன. அவருக்குத் தற்போது வயது 77 ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்