இஸ்லாமியக் குடியரசு ஈரானின் நிறுவனர் ஆயதுல்லா கொமெய்னியின் வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்!
காவலில் வைக்கப்பட்ட 22 வயதான மாஷா அமினியின் இறப்பு ஆரம்பித்து வைத்த போராட்டங்கள் ஈரானில் மூன்றாவது மாதமாகத் தொடர்கின்றது. ஆரம்பத்தில் மக்கள் குரலுக்குச் செவிகொடுப்பது போலக் காட்டிக்கொண்டாலும் வாரங்கள் கடந்தபோது அரசு தனது நடவடிக்கைகளில் கடுமையைக் காட்ட ஆரம்பித்தது. கடந்த வருடங்களில் நடந்த மற்றைய எதிர்ப்பு ஊர்வலங்களைக் கையாண்டது போல பெருமளவில் கைது, கடுமையான தண்டனை, மக்கள் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற கொடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எதிர்ப்புக் காட்டி வருபவர்கள் இளம் பெண்களாகும். பாடசாலை, கல்லூரிப் பெண்களும் சர்வாதிகாரிகள் ஒழிக என்று கூக்குரலிட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்ட ஈரானிய மக்களின் எதிர்ப்புக்கு ஆதரவான குரல்கள் உலகின் பல நாட்டின் நகரங்களிலும் எழுப்பப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோர் ஈரான் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றன.
வியாழனன்று அரசை எதிர்த்துப் போராடுபவர்கள் இன்றைய இஸ்லாமியக் குடியரசு ஈரானை நிறுவிய ஷீயா மார்க்கத் தலைவர் ஆயதுல்லா கொமெய்னியின் பிறந்த நகரிலிருக்கும் அவரது வீட்டுக்குத் தீவைத்திருக்கிறார்கள். 1979 முதல் தனது இறப்பு [1989] வரை ஈரானின் ஆன்மீகத் தலைவராக இருந்த அவரது வீடு ஒரு அருங்காட்சியகமாக இருந்து வந்தது. அது தற்போதைய அரசியலமைப்பின் ஒரு சின்னமுமாக இருந்து வந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்