உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பிக்க ஆறு மாதங்களுக்கு முன்னரே கத்தார் வந்து சேர்ந்த ஆர்ஜென்ரீன விசிறி!
உலகப் புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி விளையாடப் போகும் கடைசி உலகக்கோப்பைப் போட்டிகள் கத்தாரில் நவம்பரில் ஆரம்பமாகின்றன. இந்த முறையாவது அவர் வெற்றிக்கோப்பையைக் கையிலேந்திவிடுவதைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கத்தாருக்குப் படையெடுக்கப்போகிறார்கள் ஆர்ஜென்ரீன உதைபந்தாட்ட விசிறிகள் பலர்.
அவர்களில் முதல் ஆளாக மட்டுமல்ல கத்தாரில் நடக்கப்போகும் உலகக்கோப்பைப் பந்தயங்களைக் காணவந்திருக்கும் முதலாவது ரசிகராகவும் அங்கே வந்திருக்கிறார் 54 வயதான வழக்கறிஞர் ஒருவர். தனது நாட்டின் தேசிய விளையாட்டுக் குழுவினரை எதிர்கொள்ள 03, மே 2022 லேயே கத்தாருக்கு வந்திறங்கியிருக்கும் அந்த விசிறி மார்செலோ மார்ட்டினெஸ் ஆகும்.
உலகில் எங்கும் லயனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் இருப்பது போலவே உதைபந்தாட்டப் பைத்தியம் கொண்ட கத்தாரிலும் அவருக்கென்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மெஸ்ஸியின் படங்கள், ஆர்ஜென்ரீனா கொடிகள் பல இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. நவம்பரில் மோதல்கள் ஆரம்பமாகும் வரை தனது நேரத்தை உல்லாசமாகச் செலவிடுகிறார் மார்ட்டினெஸ். அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட கத்தார் உதைபந்தாட்டக் குழுக்கள் தமது அரங்குகளில் நடக்கும் மோதல்களைக் காண அவரை வரவேற்றிருக்கின்றன. கத்தார் உதைபந்தாட்ட விசிறிகள் சிலரின் தொடர்புகள் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டு மகிழ்கிறார் அவர். அவர்களிலொருவர் தனது வீட்டில் இரண்டு மாதங்கள் மார்ட்டினஸைத் தங்க வரவேற்றிருக்கிறார்.
ஆர்ஜென்ரீன வீரரான செர்ஜியோ ஹாவிரோ விற்றர் கத்தாரின் அல்- சைலியா உதைபந்தாட்டக் குழுவில் விளையாடி வருகிறார். அக்குழுவினர் மார்ட்டினஸை வரவேற்ற சமயம் தனது நாட்டின் வீரரைச் சந்தித்திருக்கிறார் அவர். அச்சமயம் ஹாவியோ விற்றர் தான் விளையாடியபோது பாவித்த மேல்சட்டையைக் கொடுத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்