பிள்ளைகளைகளைக் கொன்று உடல்களைத் துண்டாடியதற்காகத் தேடப்பட்ட பெண்ணை நியூசிலாந்துக்கு அனுப்பியது தென் கொரியா.
நியூசிலாந்தின் ஔக்லாந்து நகரில் ஏலம் விடப்பட்ட பயணப்பெட்டியொன்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளிருவரைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த பெண்ணைத் தென் கொரியா நியூசிலாந்துக்கு அனுப்பியிருக்கிறது. மூன்று தென் கொரியப் பொலீசாருடன் அப்பெண் ஔக்லாந்து விமான நிலையத்தில் வந்திறங்கிப் பொலீச் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நியூசிலாந்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தென் கொரியப் பெண்ணான அந்த 42 வயதுப் பெண் நியூசிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தபோதே அக்கொலைகளைச் செய்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ஏலத்திலேயே பெட்டிகளை வாங்கியவர்கள் அந்தக் குழந்தைகளின் இறந்த பாகங்களைக் கண்டெடுத்தனர். ஏலம் எடுத்தவர்களுக்குக் கிடைத்த ஒரேயளவான இரண்டு பயணப்பெட்டிகளுக்குள் குழந்தைகளுக்கான பல விளையாட்டுப் பொருட்களுடன் குழந்தைகளின் உடல்பாகங்களையும் கண்ட அவர்கள் உடனே பொலீசாரிடம் தொடர்புகொண்டிருந்தார்கள். அவை ஐந்து முதல் பத்து வயதுள்ள இரண்டு பிள்ளைகளின் உடல்பகுதிகளாகும்.
அப்பெட்டிகளின் உடமையாளர்கள் பற்றிய விபரங்களைத் தேடியதில் அப்பெண் தென் கொரியாவில் இருப்பது தெரியவந்ததால் அந்த நாட்டின் காவல் துறை உதவியை நியூசிலாந்துப் பொலீசார் நாடியிருந்தனர். அப்பெண்ணைச் செப்டெம்பர் மாதத்திலேயே தென் கொரியப் பொலீசார் கண்டுபிடித்துக் கைதுசெய்திருந்தனர். அவளது பெயர் லீ என்று மட்டுமே விபரம் வெளியிடப்பட்டிருந்தது. தமது மேலதிக விசாரணை விபரங்களைத் தென்கொரியப் பொலீசார் நியூசிலாந்துப் பொலீசாருக்குக் கையளித்திருக்கிறார்கள்.
நியூசிலாந்தில் வந்து சேர்ந்த அப்பெண் நியூசிலாந்துச் சட்டப்படி விசாரித்துத் தண்டிக்கப்படவிருக்கிறார்.
அப்பிள்ளைகள் சுமார் 3 – 5 வருடங்களுக்குள் இறந்திருக்கலாம் என்பதால் பிரேத பரிசோதனை, கையடையாளங்கள் நிரூபித்தல் ஆகியவை சிக்கலானவையாக இருக்கும் என்று நியூசிலாந்துப் பொலீசார் தெரிவித்தனர்.
சாள்ஸ் ஜெ. போமன்