மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஈரான் ஆயத்துல்லாவின் மருமகள் கைது செய்யப்படார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி கமெய்னியின் சகோதரி மகளொருவர் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். பரீதா மொராட்கானி மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் ஈரானியர்களிடையே ஏற்கனவே அறியப்பட்டவராகும்.
மொராட்கானி சமீபத்தில் வெளியிட்டிருந்த சமூகவலைத்தளப் பதிவொன்றில் உலக நாடுகள், ஈரானுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளவேண்டும் என்று வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தார். ஈரானில் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து நடந்துவரும் அரசுக்கெதிரான போராட்டங்களையும் அதில் பங்குபற்றுகிறவர்கள் அரசால் மோசமான முறையில் நடத்தப்படுவதையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
பொறியியலாளரான மொராட்கானியின் மறைந்த தந்தையும் ஒரு மனித உரிமைப் போராளியாகும். அவர் தனது மனித உரிமைப் போராட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவராகும்.
“ஓ சுதந்திரமான மனிதர்களே, எங்களை ஆதரியுங்கள். குழந்தைகளையும் கூடக் கொலை செய்துவரும் இந்த கொலைகார அரசுடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ள வேண்டுமென்று உங்கள் நாட்டு அரசாங்கங்களைக் கோருங்கள். இங்கே ஆட்சி புரிபவர்கள் தமது மதத்தின் கோட்பாடுகளுக்கு மரியாதை கொடுப்பவர்களல்ல. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமது அதிகாரத்தைக் காத்துக்கொள்வதற்காக வன்முறையைப் பாவிப்பது மட்டுமே,” என்று மொராட்கானி எல்லோரையும் கேட்டுக்கொள்கிறார்.
பிரான்ஸில் வாழும் பரிதாவின் சகோதரன் மஹ்மூட் மொராட்கானி மூலமாக அந்தச் செய்தியைக் கொண்ட படம் யூடியூபில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டத்தை அரசு தொடர்ந்தும் தனது கடுமையான நடவடிக்கைகளால் அடக்க முயன்று வருகிறது. நாட்டில் பரவிவரும் எதிர்ப்புகளின் பின்னால் வெளிநாட்டு அரசுகளும், ஈரானுக்கு எதிரானவர்களும் திட்டமிட்டுச் செயற்படுவதாக ஈரானிய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
எதிர்பாளர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் மென்மேலும் அதிகரித்தே வருவதாக வெளி நாடுகளிலிருக்கும் ஈரானிய அரசின் எதிர்ப்பு அமைப்புகள் செய்திகள் வெளியிடுகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்று அரசு குறிப்பிடுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டதில் கொல்லபட்டவர்கள் சுமார் 416 பேராகும்.
பரீதா மொராட்கானி பொலீஸ் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாகவும் வீடு திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்படுகிறது. அவர் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலச் சிறைத்தண்டனை பெற்றிருக்கலாம் என்று அவரது சகோதரர் நம்புகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்