சுமார் ஒரு மாதத்துக்குள் 25 உலகத் தலைவர்களைச் சந்தித்துவிட்ட ஷீ யின்பிங்கின் அடுத்த விஜயம் சவூதி அரேபியாவுக்கு.
ஒக்டோபர் மாதக் கடைசியில் சீனாவின் தலைமையை மீண்டும் கைப்பற்றிய ஷீ யின்பிங் புதனன்று அராபிய – சீன உயர்மட்ட மா நாட்டில் பங்குபற்ற சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்கிறார். கொரோனா பரவ ஆரம்பித்ததுடன் தனது வெளிநாட்டு விஜயங்களை நிறுத்திவிட்டதுடன், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதையும் தவிர்த்த சீனத் தலைவர் சீனாவின் பலத்தை உலக நாடுகளிடையே மீண்டும் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, மத்திய ஆசியா, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களை அவர் வெவ்வேறு இடங்களில் நடந்த மாநாடுகளில் சந்தித்துத் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டார். தம்முடனான நெருக்கத்தை மட்டுமன்றி சவூதி அரேபியாவுடனான நெருக்கத்தையும் சமீப காலத்தில் வெட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுடைய சர்வதேச உறவுத் தொடர்புகளுக்குச் சவாலாகச் சீனாவின் பலத்தைப் புதுப்பித்துக் கொள்வதே அவரது முக்கிய நோக்கமாகும்.
வெளியே பெருமளவில் பேசப்படாத ஆராபிய – சீன மாநாடு பற்றிச் சவூதி அரேபியா ஊடகங்கள் தொடர்பு கொண்டபோதும் விபரங்களை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி, பாதுகாப்புத் துறைகளில் முதலீடுகள் செய்யப்படுவது பற்றிய பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வெவ்வேறு அராபிய நாடுகளால் சீனாவுடன் செய்துகொள்ளப்படும் என்று ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்வும், தடுப்பாடும் ஏற்பட்டிருக்கும் கடந்த மாதங்களில் அமெரிக்கா சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் தமது தயாரிப்பை உயர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அந்த நாடுகள் அதை மறுத்துவிட்டதால் இரண்டு பகுதியாருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனாக்காலத்தில் தயாரிப்புகள் பெருமளவில் குறைந்திருந்த பின்னர் அவற்றை மீண்டும் உயர்த்த விரும்பும் சீனாவுக்கும் எண்ணெய் குறைந்த விலையில் தேவையான அளவு கிடைப்பது அவசியம்.
மேற்கு நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்க மறுத்திருக்கும் சமயத்தில் அங்கிருந்து சீனா அதிகளவில் இறக்குமதி செய்தாலும் கூட ரஷ்யாவிடம் மட்டும் அதற்காகத் தங்கியிருக்க விரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் எரிபொருளுக்காகத் தங்கியிருந்த நிலைமையால் பாடம் கற்றுக்கொண்ட சீனா தனது எரிபொருள் இறக்குமதியை வெவ்வேறு இடங்களிலிருந்து செய்துகொள்ள விரும்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்