தனது சினிமாவுக்குத் திரைமூட இந்தியாவில் கோரும்போது உலகக்கோப்பைத் திரையை நீக்கிவைத்தார் தீபிகா படுகோனே.
ஞாயிறன்று கத்தார் லுசாய்ல் அரங்கில் ஆர்ஜென்ரீனாவின் தேசிய அணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்கான மோதல்களில் பங்குபற்றியதன் மூலம் உதைபந்தாட்ட உலகில் புதிய சாதனைகள் பலவற்றைச் செய்த லயனல் மெஸ்ஸியின் பெயரே பெருமளவில் பேசப்பட்டது. அவருக்கான அந்தப் பரிசை உலக்குத் திறந்துவைத்த இன்னொரு பிரபலம் இந்திய நட்சத்திரம் தீபிகா படுகோனே ஆவார்.
முதல் தடவையாக ஒரு இந்தியர் FIFA திரையை அகற்றி உலகக்கோப்பையைத் திறந்தார் என்ற பெருமை படுகோனேக்குக் கிடைத்திருக்கிறது. உலகப்புகழ் பெற்ற Louis Vuitton நிறுவனத்தின் சர்வதேசச் சின்னம் என்ற கௌரவத்துடன் அக்கிண்ணத்தைத் திறக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனமே உலகக்கிண்ணத்தை இவ்வருடம் வழங்கியிருக்கிறது. இவ்வருடம் மே மாதத்தில் தீபிகா படுகோனே அந்த உல்லாசப் பொருட்கள் நிறுவனத்தின் கௌரவச் சின்னமாகத் தெரிவுசெய்யப்பட்டபோது அந்த நிறுவனத்தின் அந்த இடத்தைப் பிடித்த முதலாவது இந்தியராகவும் ஆகினார்.
இவ்வருடத்தில் தீபிகா படுகோனே மேலுமொரு சிகரத்தையும் தொட்டார். கான் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக அவர் பங்குபற்றியிருந்தார். அந்தப் பெருமை பெற்ற முதலாவது இந்தியரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், சமீபத்தில் வெளியாகியிருக்கும் “பேஷரம் ராங்க்….” பாடல் காட்சியில் தீபிகா படுகோனே, ஷாருக்கான் காட்சிகள் இந்தியாவில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. “பத்தான்” சினிமாவில் வரும் அந்தப் பாடல் காட்சிகளில் அவர் சின்னஞ்சிறிய கவர்ச்சி உள்சட்டையில் தோன்றியிருப்பதை இந்துசமயத் தீவிரவாதிகளும், இஸ்லாமியப் பழமைவாதிகளும் கண்டித்து அப்பாடலின் பல காட்சிகள் நீக்கப்படவேண்டுமென்று குரலெழுப்பி வருகிறார்கள்.
பாடலின் கடைசிப் பகுதியில் படுகோனே காவி நிறத்தில் கவர்ச்சியுடை அணிந்திருப்பதை இந்துப் பழமைவாதிகள் எதிர்த்து வருகிறார்கள். இஸ்லாமியத் தரப்பிலிருந்து அந்தப் பாடல் காட்சி உட்பட சினிமாவில் ஷாருக்கான் பாத்திரமானது பத்தான் இனத்தவரைக் கேவலப்படுத்துவதாக அமைந்திருப்பதாகக் குதிக்கிறார்கள். இந்திய இஸ்லாமிய அமைப்புக்கள் சில அந்தச் சினிமாவை முஸ்லீம்கள் பகிஷ்கரிக்கவேண்டுமென்று குரலெழுப்பியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்