பிரிட்டனுக்கு வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதில் தவறில்லை என்றது நீதிமன்றத் தீர்ப்பு.
ஆங்கிலக்கால்வாய் மூலமாக பிரிட்டனுக்கு அனுமதியின்றி நுழையும் அகதிகளை நிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறது அரசு. அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் சமயத்தில் அவர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே என்று நாட்டின் உயர் நீதிமன்றம் திங்களன்று தனது தீர்ப்பைக் கூறியிருக்கிறது. திட்டமானது இவ்வருட முதல் பாகத்தில் அரச பொறுப்பிலிருந்த போரிஸ் ஜோன்சன் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
ஐரோப்பிய அகதிகள் அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த ஐக்கிய ராச்சியத்தின் ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம். ஐ.நா- உட்பட்ட பல அமைப்புக்களும், மனித உரிமைக் குழுக்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. அவர்கள் பலரும், தனித்தனியாக அகதிகளும் அந்தப் பயணத்தை நிறுத்தும்படி வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குப் போட்டிருந்தார்கள். ஐக்கிய ராச்சிய நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அப்பயணத்தை ஐரோப்பிய நீதிமன்றம் கடைசி நிமிடத்தில் நிறுத்தியிருந்தது.
டிசம்பர் 19 ம் திகதியன்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் ருவாண்டாவுக்கு அனுப்பப்படுகிறவர்களின் நிலைமையைத் தனித்தனியாகப் பரிசீலனை செய்த பின்னரே அவர்களை அனுப்புவது பற்றிய முடிவை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதல் கட்டமாக அங்கே அனுப்பப்பட இருந்தவர்களின் பிரத்தியேக நிலைமைகள் சரியான முறையில் ஆராயப்படவில்லை என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக், உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மான் இருவருமே ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பிவைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதிகொடுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்