இதுவரை இஸ்ராயேல் காணாத வலதுசாரித் தேசியவாதிகள் அரசாங்கம் அமைக்கிறார்கள்.
பெஞ்சமின் நத்தான்யாஹு தலைமையில் இஸ்ராயேல் இதுவரை காணாத ஒரு வலதுசாரித் தேசியவாதக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது. வேகமாகப் புதிய குடியேற்றங்களை யூதர்களுக்காகக் கட்டியெழுப்புவது என்று வெளிப்படையாக அறிவித்துப் பதவியேற்கும் ஆட்சியின் நோக்கு பாலஸ்தீனர்களிடமிருந்து ஆக்கிரமித்து வைத்திருக்கும் பிராந்தியங்களில் யூதர்களைக் குடியேற்றி அவற்றை இஸ்ராயேலின் பகுதிகளாக்குவதாகும்.
புதிய அரசாங்கம் பதவியேற்க முன்னரே உள்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் உண்டாக்கித் தலையங்களில் இடம்பிடித்துக்கொண்டது. பாலஸ்தீனர்களின் பகுதியான மேற்குச் சமவெளியில் பெருமளவில் வீடுகளைக் கட்டி அதை யூதர்கள் வாழும் பூமியாக்குவதும் புதிய அரசின் கொள்கையாகும். அங்கே ஏற்கனவே அனுமதியின்றிக் குடியேறிய அரை மில்லியன் யூதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
சர்வதேசக் கண்ணோட்டத்தில் இஸ்ராயேல் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பாலஸ்தீன நிலப்பகுதி பாலஸ்தீனர்களிடமே திருப்பப்படவேண்டும் என்பதாகும். எனவே புதிய அரசின் நகர்வுகள் இஸ்ராயேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவாலும் தீவிரமாகக் கண்டிக்கப்படுகிறது. இப்படியான நகர்வு எதிர்காலத்தில் பாலஸ்தீனர்களுடன் சமாதானம் செய்துகொள்வதை மேலும் கடினமாக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் கட்டுப்படுத்த முடிவுசெய்திருக்கிறது புதிய அரசு. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளை உச்ச நீதிமன்றம் தடுக்க முடியாமல் செய்வதன் மூலம் நத்தான்யாஹு மீதிருக்கும் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்காமல் தடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வீடுகளைக் கட்டவும் தடைகள் இல்லாமல் செய்யப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்