நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து, பிரான்ஸ் தொழிலாளர்கள் தமது அதிருப்தியை ஒன்றிணைந்து காட்டுகிறார்கள்.
பிரான்ஸின் மக்ரோன் அரசு நாட்டின் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்தது. மக்களின் வாழும் காலம் அதிகரித்து, பிள்ளைப்பிறத்தல் குறைந்திருப்பதால் நாட்டின் சுபீட்சத்தை நிலைப்படுத்திக்கொள்ள இந்த நடவடிக்கை அவசியம் என்கிறது அரசு. பிரான்ஸ் மக்களின் சுமார் 66 விகிதமானோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது கருத்துக்கணிப்புகள்.
எதிர்க்கட்சிகள் பிரான்ஸில் நூற்றுக்கணக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்த தத்தம் துறையில் எட்டுத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை நடத்துகின்றன. பெற்றோல் விநியோக நிறுத்தம், பாடசாலைகள், கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடத்த, நாடெங்கும் ரயில், பேருந்துப் போக்குவரத்துகளும் அனேகமாக இயங்கமாட்டா. மருத்துவ சேவையிலுள்ளவர்களும், பொதுத்துறை ஊழியர்களும் பெரும்பாலும் வேலைகளுக்குச் செல்லமாட்டார்கள்.
ஓய்வூதிய வயதை அதிகரிப்பது வெவ்வேறு துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வெவ்வேறு விளைவுகளைக் கொடுப்பதால் அது எல்லோருக்கும் சமமானதாக இல்லை என்கிறார்கள் புதிய திட்டத்தை எதிர்ப்பவர்கள். கடினமான வேலைகளுள்ள துறைகளில் குறைந்த வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பிப்பவர்கள் ஆரோக்கியம் விரைவில் பலவீனமாகிவிடுகிறது. கொரோனாக்காலம் பலரை வேலையிழக்கச் செய்திருக்கிறது. அவர்களில் 50 வயதையடுத்தவர்களுக்கு வேறு வேலைகள் கிடைப்பதுமில்லை. அப்படியான நிலையில் ஏற்கனவே வேலையிழந்தவர்களுக்கு 64 வயது ஓய்வு என்பது மேலுமிரண்டு வருட வேலையில்லாமையையே கொடுக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்