வீட்டில் வன்முறைக்குட்படுத்தப்பட்ட தங்களைக் காப்பாற்றும்படி துருக்கியில் அடைக்கலம் கோரிய 5 குவெய்த் சகோதரிகள்.
தமது சொந்தக் குடும்பத்தினரால் வன்முறைக்கும், பாலியல் சேட்டைகளுக்கும் ஆளாகியதாகக் குறிப்பிட்டுத் துருக்கியில் அடைக்கலம் கோரியிருக்கிறார்கள் குவெய்த்தைச் சேர்ந்த ஐந்து சகோதரிகள். அவர்களில் இருவர் வயதுக்கு வராதவர்களாகும். சமீப வாரங்களில் துருக்கிக்கு வந்திறங்கிய அவர்கள் வயது முறையே 23, 22, 20, 15, 12 ஆகும்.
சகோதரிகளில் மூத்தவரான அல்நூட் அல்சயேதி, “நாங்கள் மிக மிகப் பயங்கரமான நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறோம், எங்களைக் காப்பாற்றுங்கள்,” என்று துருக்கிய அதிகாரத்திடமும், துருக்கியிலிருக்கும் சமூக உதவிசெய்யும் அமைப்புக்களிடமும் தங்களைக் குவெய்த்துக்குத் திருப்பியனுப்பாமலிருக்க உதவி கோரி டுவிட்டர் மூலம் வேண்டியிருக்கிறார்கள்.
அதையடுத்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் துருக்கிய அரசுக்குக் கொடுத்த அழுத்தங்களால் அச்சகோதரிகளைத் துருக்கிய அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள். அதுபற்றி அவர்கள் எடுத்த முடிவைப் பொதுவில் வெளியிடாடிவிட்டாலும் கூட குவெய்த்துக்கு அவர்களை உடனடியாகத் திருப்பியனுப்பப் போவதில்லை என்ற முடிவுக்கே அவர்கள் வந்திருப்பதாக மனிதாபிமான அமைப்புகளிடம் குறிப்பிட்டிருக்கின்றன. சகோதரிகளில் வயதுக்கு வராதவர்களிருவரையும் துருக்கிய சமூச சேவை அதிகாரிகள் தமது பாதுகாப்பில் எடுத்திருக்கிறார்கள்.
ஐ.நா – வின் மனித உரிமை அமைப்புக்கும் ஐந்து சகோதரிகளின் கோரிக்கை பற்றித் தெரியும். துருக்கிய சட்டப்படி அச்சகோதரிகள் வெளியிட்டிருக்கும் விபரங்கள் உண்மையா என்று அறியப்பட்ட பின்னரே அவர்களைத் துருக்கியில் தங்க அனுமதிப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்