பரக் ஒபாமாவிடமிருந்த சாதனையைக் கைப்பற்றினார் இளவரசர் ஹரி!
“உதிரிப்பாகம்” [Spare] என்ற பெயரில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இடையேயான உறவுகளைப் பற்றிய விபரங்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் பிரிட்டிஷ் இளவரசர்களில் ஒருவரான ஹரி. வெளியாகிய புத்தகங்களில் ஆரம்ப நாட்களிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனையானவை என்ற கின்னஸ் சாதனையை அப்படைப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
வெளியாகிய முதலாவது நாளே ஹரியின் புத்தகம் 1,43 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. அதற்கு முன்பு 887,000 பிரதிகளை வெளிவந்த முதல் நாளிலேயே விற்ற புத்தகம் பரக் ஒபாமாவின் “A Promised Land” ஆகும். 2 மில்லியன் பிரதிகள் விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டதால் ஹரியின் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது.
தனது புத்தகத்தில் ஹரி தனது தாயார் டயானாவின் மரணம் தன்னை எப்படிப் பாதித்தது, தனக்கும் தந்தையார் அரசன் சார்ள்ஸூக்கும் உள்ள உறவு, பிரிட்டிஷ் பட்டத்து இளவரசருன் தனது சகோதரனுமான வில்லியத்துக்கும் தனக்குமான உறவில் ஏற்பட்ட விரிசல்கள், கைகலப்பு, தனது மனைவி அரசகுடும்பத்தில் வரவேற்கப்படவில்லை என்ற ஆதங்கம் போன்றவைகளை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். முதல் தடவையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட தருணம் உட்பட்ட ஹரியின் அந்தரங்க விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஹரியின் வாழ்க்கை விபரங்களடங்கிய தொலைக்காட்சி பெற்றதைப் போன்ற விமர்சனங்களையே புத்தகமும் பெற்றிருக்கிறது. ஒரு சாரார், “இதையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள அவசியமில்லை,” என்றும் இன்னோர் பகுதியினர், “இதன் மூலம் நாம் பிரிட்டிஷ் அரசகுடும்ப உறவுகளின் போலித்தனம் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது,” என்றும் விமர்சித்து வருகிறார்கள்.
தனது வெளியிட்ட விடயங்களில் தனது தந்தை, சகோதரன் பற்றிய மேலும் பல விடயங்களைத் தான் தவிர்த்திருப்பதாக ஹரி கூறுகிறார். அவற்றையும் சேர்த்திருப்பின் அவர்கள் என்றுமே தன்னை மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிடும் அவர் குடும்பத்தினர் தன்னை மன்னித்து மீண்டும் குடும்பத்துடன் இணைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அரச குடும்பத்துடனான உத்தியோகபூர்வமான தளைகளை வெட்டிக்கொண்டு பிரிட்டனுக்கு வெளியே வாழ்ந்துவரும் ஹரி. மேலுமொரு புத்தகத்துக்கான விடயங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்