ஹைத்தியின் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் மேலும் பலமாகி வருகின்றன.
சட்டம், ஒழுங்குகள் எதுவுமே கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வறிய நாடான ஹைத்தியில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைத் தத்தம் வசத்தில் வைத்து மோதிவரும் ஆயுதம் தாங்கிய அராஜகக் குழுக்கள் நாட்டின் பொலீஸ் அதிகாரிகளைக் கொன்றழித்து வருகின்றன. தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றி ஜூலை 2021 இல் பதவியேற்றதிலிருந்து இதுவரை மாதாமாதம் ஐந்து பொலீஸ் அதிகாரிகளாவது வன்முறைக்குழுக்களால் கொல்லப்பட்டிருப்பதாக நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் பொலீஸ் உடையணிந்த அராஜகக் குழுக்கள் நாட்டின் பிரதமரின் உத்தியோகபூர்வமான வீட்டுக்குள் நெருங்க முற்பட்டன. அங்கே அவர்களைத் தடுக்க பொலீசார் முற்படவே வீட்டைத் தாக்கினார்கள். பிரதமர் அச்சமயத்தில் தான் தனது ஆர்ஜென்ரீன விஜயத்தை முடித்துக்கொண்டு விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதனால் அராஜகக் குழுவினர் விமான நிலையத்தைத் தாக்க ஆரம்பித்தனர். பொலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகச் செய்திகள் வெளியாயின. சமூக வலைத்தளத்தில் வெளியாகிய படங்கள் பொலீசாரில் ஒரு பகுதியினர் அராஜகக் குழுக்களைத் தடுப்பதில் ஈடுபடாமலிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஹைத்தியப் பொலீசாரை விட அதிக எண்ணிக்கையானவர்களைக் கொண்ட இரண்டு அராஜகக் குழுக்கள் பொலீசாரிடமிருப்பதை விட அதிக ஆயுதங்களுடன் நாட்டின் வெவ்வேறு பக்கங்களில் தமது ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறார்கள். மேலும் பலமடைவதற்கான போர்கள் அக்குழுக்களிடையே நடந்து வருகின்றன. அவைகளைத் தவிர வேறு சிறு குழுக்களும் ஆயுதங்களுடன் மக்களிடையே கொள்ளையடித்து வருகிறார்கள்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே ஐ.நா சர்வதேச அளவில் வெளியிட்ட வேண்டுதலில், “வெளியிலிருந்து சில நாடுகள் ஒன்றிணைந்து ஹைத்தியைக் கைப்பற்றிச் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவேண்டும்,” என்றிருந்தது. எந்த நாடும் இதுவரை முழுவதுமாக அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை. அமெரிக்கா மற்றும் கனடா ஒன்றிணைந்து ஹைத்தி பொலீசாருக்கு உதவி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்