போரின் ஓராண்டு நிறைவுபெறும்போது ரஷ்யா பெலாரூஸ் ஊடாக உக்ரேனைத் தாக்கலாம்.
ரஷ்யா தனது உக்ரேன் படையெடுப்பை ஆரம்பித்த ஒரு வருட நிறைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதையொட்டி உக்ரேன் மீதான இன்னொரு முனைத் தாக்குதலை ரஷ்யா பெலாரூஸ் வழியாக நடத்தக்கூடும் என்று உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாகவே அடையாளங்கள், ஞாபகச்சின்னங்களை விரும்பும் ரஷ்யா ஒரு வருட நாளில் உக்ரேனின் கிழக்கில் தீவிரமான ஒரு தாக்குதலைத் திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்காரியதரிசி அந்தோனியோ குத்தேரஸ் சில நாட்களுக்கு முன்னர் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசியபொழுது, உக்ரேன் மீதான போர் மேலும் தீவிரமாக வளர்வதற்கு அறிகுறிகள் தெரிவதாக எச்சரித்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார். மேலும் அவர் தனது உரையில் இவ்வருடத்தின் தனது முக்கிய காரியங்களாக பரவிவரும் வறுமையை அழித்தல், காலநிலை மாற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகள், வளர்ந்துவரும் அனு ஆயுதப் போர் அபாயத்தைத் தடுத்தல், வெவ்வேறு பிராந்தியங்களில் ஏற்பட்டிருக்கும் போர்களை நிறுத்துதல் ஆகியவை இருக்கும் என்று குறிப்பிட்டார்.
“உலகில் ஏற்பட்டிருக்கும் இதப் பதட்ட நிலையை மாற்ற நாம் ஒரு வழி மாற்றம் செய்துகொள்ளவேண்டும். நல்ல செய்தி என்னவென்றால், காலநிலை, நிதி, போர்களுக்கான தீர்வுகள் போன்றவைகளை எவ்வாறு திருப்புவது என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்துக்காக எதையும் செய்யாமலிருப்பது, செயல்பாட்டின் செலவுகளை விட அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனின் கிழக்கு முனையை நோக்கி ரஷ்யத் துருப்புகள் மாற்றப்படுவதாகத் தெரியவில்லை என்றே அப்பிராந்தியத்து இராணுவ உளவுத்துறையின் கவனிப்பு. அதேசமயம் ரஷ்யாவில் மேலும் 500,000 போர்வீரர்களைத் திரட்டும் முயற்சியில் புத்தின் ஈடுபட்டிருப்பதாகவும் உக்ரேன் உளவு அமைப்பு தெரிவிக்கிறது. எப்படியாயினும் ரஷ்யா விரைவில் ஒரு மும்முரமான தாக்குதலை நடத்தும் திட்டங்களிலே ஈடுபட்டிருப்பதாகவே கடந்த வாரங்களில் உக்ரேன் ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்