விரைவில் இஸ்தான்புல்லை ஒரு பலமான பூகம்பம் தாக்கும் என்ற செய்தியால் கலங்குகிறார்கள் நகரமக்கள்.
பெப்ரவரி ஆறாம் திகதியன்று துருக்கி – சிரியா எல்லையையடுத்துள்ள பிராந்தியங்களில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து நிச்சயமாக இஸ்லான்புல்லில் அதுபோன்ற பலமான பூமியதிர்ச்சியொன்று ஏற்படும் என்று நாட்டின் பூமியதிர்ச்சி ஆராய்ச்சியாளரொருவர் தெரிவித்திருக்கிறார். அவரது எச்சரிக்கையானது நகரின் சுமார் 20 மில்லியன் குடிமக்களைக் கலங்கவைத்திருக்கிறது.
ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இறந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. துருக்கியில் பெரும்பாலான எண்ணிக்கையில் இறப்புக்கள் நடந்திருப்பது ஆரம்பத்திலிருந்து தெரிந்தது. சிரியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் கடந்த நாட்களில் உலக நாடுகளின் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் சென்றடைந்திருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்புகொண்டு நிலைமையைக் கவனித்த ஐ.நா-வின் இயற்கை அழிவு மீட்பு அமைப்பின் தலைவர் மார்ட்டின் கிரிபித் சுமார் 50,000 பேருக்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
“சமீபகாலத்தில் எங்கள் பிராந்தியங்களில் நடந்த நிலத்தட்டுக்களின் நகர்வுகளையும், பூமியதிர்ச்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இஸ்தான்புல்லில் நடக்கக்கூடிய பூமியதிர்வு இன்றைய தினம் நடந்தாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது,” என்று இஸ்தான்புல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்வாளர் சுக்ரு எர்சோய் குறிப்பிட்டிருக்கிறார்.
வருடாவருடம் சுமார் ஐந்து பூமியதிர்ச்சிகளையாவது எதிர்கொள்ளும் துருக்கியின் புவியியல் நிலைமை இஸ்தான்புல் பகுதிகளில் வாழும் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூமியதிர்ச்சியின் அழிவுகளால் பெரும்பாலானோர் இறக்கக் காரணம் பாதுகாப்புச் சட்டங்களை உதாசீனம் செய்து கட்டப்பட்ட கட்டடங்களே என்ற செய்தியானது அவர்களிடையே கலக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
கட்டடங்களின் நிலைமை பற்றி இஸ்தான்புல் நகர ஆளுனர் எக்ரெம் இமாமொகுலு சில நாட்களுக்கு முன்னர் பேசியபோது நகரிலுள்ள சுமார் 90,000 கட்டடங்கள் பூமியதிர்வொன்றால் மிகவும் பாதிக்கப்படுமளவுக்குப் பலவீனமானவை மேலும் 170,000 கட்டடங்கள் ஓரளவேனும் பாதிக்கப்படக்கூடியவையென்று தெரிவித்தார். இஸ்தான்புல் நகரப் பொறியியலாளர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்த விபரங்களே அவை என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் சுமார் 6,500 கட்டடங்கள் முழுவதுமாக இடிந்து விழுந்ததை இஸ்லான்புல் நகர மக்கள் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நகரிலும் பழைய கட்டடங்களில் பலர் வாழ்கிறார்கள். அவர்களுடைய பொருளாதார வருமானம் புதிய, நவீன கட்டடங்களைக் கொள்வனவு செய்யப் போதுமானதாக இல்லை. அதேசமயம், எந்தச் சமயமும் உண்டாகக்கூடிய பூமியதிர்ச்சி பற்றிய பயமும் அவர்களை வாட்டியெடுக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்