நத்தார் தினச் சோடனைப் பொருட்களுக்காகக் கதவுகளைத் திறந்த சவூதி அரேபியா.
ஓரிருவருடங்களுக்கு முன்னர் எவரும் கற்பனையிலும் சிந்திக்க முடியாமலிருந்த விடயம் இஸ்லாமிய மத குருக்களால் சகலமும் இயக்கப்பட்டிந்த சவூதி அரேபியாவுக்குள் நத்தார் கொண்டாட்டம் நுழையும் என்பதாகும். பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் பிரகடனப்படுத்திய ‘சகல நம்பிக்கைகளையும் வரவேற்கும் முகமுள்ள இஸ்லாமியச் சமூகமாக சவூதி மாற்றப்படும்’ என்ற திட்டத்தின்படி நாட்டின் சோடனைப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இவ்வருடம் நத்தார் சோடனைப் பொருட்களைக் காணமுடிகிறது.
கிறீஸ்தவ மத நாடுகளிலிருந்து சவூதியில் வந்து வேலைசெய்யும் பலரும் வழக்கமாகத் தங்கள் நத்தார் கொண்டாட்டங்களை சத்தமில்லாமல் வீட்டுக்குள்தான் கொண்டாட முடியுமாக இருந்தது. அதற்கான சோடனைப் பொருட்களை அவர்கள் தமது நாடுகளிலிருந்து கொண்டுவந்தார்கள். பொது வெளியில் ஒரு கிறீஸ்தவ மதக் கொண்டாட்டத்தை அவர்களால் கொண்டாட முடியவில்லை.
சமீப காலத்தில் மிகவும் மெதுவாக சவூதிய அரசியலில் கிறீஸ்தவ நாடுகளுடனான தொடர்புகள் நெருக்கமாகின்றன. பாடசாலைப் புத்தகங்களில் யூதர்கள், இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களெல்லாம் “பன்றிகள், அழுக்கானவர்கள், குரங்குகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தன. அவைகளையும் மறுபரீசீலனை செய்து வருகிறது சவூதிய கல்வி, கலாச்சார அமைச்சு.
கலாச்சார நிகழ்ச்சிகளை ஆண்களும், பெண்களும் ஒரே கட்டடத்துக்குள் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், மல்யுத்தங்கள், பிரபல இசைக்கலைஞர்கள் போன்றவர்கள் மேற்கத்தைய கலாச்சார உலகிலிருந்து வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை இந்துக் கோவில்களும், கிறீஸ்தவ தேவாலயங்களும் அமைக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ.போமன்