‘மாஸ்க்’ அணியா அழகிகள் மேடையில்! நோர்மென்டி யுவதிக்கு வெற்றிக் கிரீடம்!!
பிரான்ஸில் இளம் அழகியைத் தெரிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் மிக்க நிகழ்வுகளின் நூறாவது போட்டி வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று சனி இரவு வழமைக்கு மாறான முறையில் நடைபெற்றிருக்கிறது.
நாட்டின் மேற்கே உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த புய் து பூ (Puy du Fou) கருத்தியல் பூங்காவில் நடைபெற்ற இந்த அழகிகள் தேர்வுப் போட்டியில்(Miss France 2021)18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட 29 இளம் அழகிகள் பங்குபற்றினர்.அவர்களிடையே இருந்து நோர்மென்டியைச் சேர்ந்த 23 வயதான அமொண்டின் பெட்டிற் (Amandine Petit) 2021 ஆம் ஆண்டுக்கான பிரான்ஸின் இளம் அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
நடப்பு ஆண்டின் அழகியான குவத்தலூப்பைச் (Guadeloupe) சேர்ந்த கிளெமன்ஸ் பொற்றினோ (Clémence Botino) புதிய அழகிக்கு கிரீடத்தை அணிவித்தார். நாடளாவிய ரீதியில் மக்கள் செலுத்தும் வாக்குகளை விட இந்தத் தடவை முன்னாள் அழகிகள் வழங்கிய புள்ளிகள் வெற்றியாளரைத் தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகித்தது.
1963 ஆம் ஆண்டு பிரான்ஸின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 81 வயதான பப்றீஸ் முஜெத் (Muguette Fabris) உட்பட முழுவதும் பெண்களைக் கொண்ட முன்னாள் அழகிகள் நேற்றைய தேர்வில் நடுவர்களாகக் கலந்துகொண்டமை முக்கிய அம்சம்.
வழமை போன்று அழகிகள் மேடையில் தோன்றி நடையுடை பவனிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் இடைவெளிகள் இருந்தன. எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை.
வழமையாக பார்வையாளர்கள் நிறைந்த அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டித் தேர்வில் இம்முறை நடுவர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் மாத்திரமே பார்வையாளர்களாக இருந்தனர்.அனைவரும் நிகழ்வுக்கு முன்னராக கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
போட்டி நிகழ்வை TF1 தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.1920 இல் ஆரம்பித்த இத்தகைய உடல் அழகுப் போட்டிகளுக்கு பெண்ணிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
பாலியல் ரீதியில் பெண்களைக் காட்சிப்படுத்திப் பாகுபடுத்துகின்ற இத்தகைய போட்டிகள் நூற்றாண்டை நெருங்குவதில் எந்தப் பெருமையும் பெண்களுக்கு இல்லை என்று பெண்ணுரிமை அமைப்புகள் எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.