இந்தியாவின் இனம்மாறிய அழகியாகத் தெரிவுசெய்யப்பட்டார் ஷாயின் சோனி.
இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடக்கவேண்டிய இந்தப் போட்டி மே மாதம் வரை இந்தியாவில் நிலவிய வீட்டடங்கு நிலையால் தள்ளிப்போய் சனியன்று 19 ம் திகதியன்று நடாத்தப்பட்டது. இந்தியாவின் அழகு என்று தெரிந்தெடுக்கப்பட்ட ஷாயின் சோனி சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்காகப் போட்டியிடுவார்.
தொழிலில் அழகமைப்பாளரான ஷாயின் சோனி ஆணாகப் பிறந்தாலும் சிறு வயதிலிருந்தே தன்னைப் பெண்ணாகவே உணர்ந்தவர். அதனால் பெண் போன்று அலங்காரங்கள் செய்ததால் குடும்பத்தார், சுற்றத்தாரால் ஏளனப்படுத்தப்பட்டவர். தனது அழகுணர்ச்சியாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி இந்தியாவின் அழகமைப்புப் பல்கலைக்கழகத்தில் ( the National Institute of Fashion Technology) தேர்ந்து அத்தொழிலில் பிரபலம் பெற்றார். இவர் தனது சொந்த அழகமைப்பு நிறுவனத்தையும் நிறுவியிருக்கிறார்.
இந்தப் போட்டியின் [Miss Transqueen India] இந்தியப் பொறுபாளரான ரீனா ராய் மூலமாகத் தனது உண்மையான உணர்வை வெளியே அடையாளங்காட்டிக்கொள்ளத் துணிந்ததாகச் சொல்கிறார் ஷாயின் சோனி.
பல ஆண்டுகளாகவே தன் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி வெளியே தன்னை ஆணாகவே அடையாளங்காட்டி வந்த தான் இனிமேல் தன்னைப் போன்று ஒரு இன உடலில் பிறந்து எதிர்ப் பாலினமாக உள்ளே உணர்பவர்களின் நல்வாழ்வுக்காகத் தான் இயங்குவேன் என்கிறார் ஷாயின்.
இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பொன்று 2014 இல் இந்தியாவில் ஒவ்வொருவரும் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ, அல்லது இரண்டுமற்ற மூன்றாவது இனமாகவோ அடையாளங்கண்டு வாழலாம் என்று குறிப்பிடுகிறது. ஆனாலும், transgender என்றழைக்கப்படும் இவர்கள் மற்றவர்களின் கேலிக்குரியவர்களாகவே இந்தியாவில் நடாத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்