கொரோனா வைரஸ்கள் இதுவரை நுழையாமலிருந்த அண்டார்ட்டிக்காவிலும் நுழைந்துவிட்டன.
அண்டார்ட்டிக் கண்டத்தில் மட்டுமே இதுவரை கொரோனாத் தொற்று எவருக்குமில்லாமலிருந்தது. அங்கே சிலே இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் Bernardo O’Higgins base ஆராய்ச்சி மையத்தில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சிலிய இராணுவம் அறிவிக்கிறது. அவர்களில் 26 இராணுவத்தினரும் மீதி அங்கே சேவைகள் செய்ய வந்திருந்த 10 தனியாருமாகும்.
கடலாலும், பனிமலைகளாலும் சூழப்பட்டிருக்கும் அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை எல்லோரும் மிகவும் கவனமாக சோதிக்கப்பட்டு வந்தார்கள். பல அரிய விலங்கினங்களைக் காண அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடந்த பல மாதங்களாக அனுமதிக்கப்படவில்லை. அட்லாண்டிக் பிராந்தியத்திலிருக்கும் ஆராய்ச்சியாளர்களுட்பட்ட மேலும் சுமார் 1,000 பேர்களிடையேயும் இதுவரை எவ்வித தொற்றுக்களும் இருக்கவில்லை. அவர்கள் அங்கேயே இருக்கும்படி பணிக்கப்பட்டிருந்தார்கள்.
இராணுவத்தினரும், அங்கே வெவ்வேறு சேவைகள் செய்வதற்காக வருபவர்களும், பொருட்களை விநியோகம் செய்ய வருபவர்களுடனும் மட்டுமே அவர்களுடைய தொடர்பு இருந்தது. இப்பகுதிக்கு நவம்பர் – டிசம்பர் சமயத்தில் பயணித்த சிலேயின் ஒரு கடற்படைக் காவல் கப்பலிலும் சுமார் 10 பேருக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டதால் அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்