“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.
மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது.
முஸ்லீம் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்த ஒரு இந்துப்பெண்ணை நகரின் பிள்ளைகள் பாதுகாப்பு நிலையம் அவளது விருப்பதுக்கு மாறாக அங்கிருந்து தன் நிலையத்திற்குக் கொண்டுவந்திருந்தது. அதையெதிர்த்து வழக்குப் போட்ட கணவனின் வழக்கில் அப்பெண்ணுடன் கலந்தாலோசித்துவிட்டே நீதிமன்றம் இத்தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது.
அவளைப் பிரித்துத் தனது நிலையத்துக்குக் கொண்டுசென்ற பாலர் பாதுகாப்பு நிலையம் அடுத்த நாளே அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்திருந்தது. குறிப்பிட்ட நாளில் அவளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு அவளை விசாரித்த நீதிமன்றம் அவள் 18 வயதுக்கு மேற்பட்டவள் என்பதை உறுதிசெய்துகொண்டு அவளும் கணவனும் ஒன்றாக வாழ உரிமையுள்ளவர்கள், என்று குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்