கிரவேஷியாவில் பூமிநடுக்கம்!
கிரவேசியாவின் தலை நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலிருக்கும் பெத்ரின்யா நகரில் இன்று பூமி நடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பூமியதிர்ச்சியின் மையம் நகரின்கீழே சுமார் 10 கி.மீ ஆழத்திலிருந்தது.
இதே இடம் நேற்றும் ஒரு மெல்லிய பூமியதிர்ச்சியை உணர்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தலைநகரான ஸாகிரெப் நகரத்திலும் பக்கத்திலிருக்கும் ஸ்லோவேனியா, ஆஸ்திரியா நாடுகளில் இன்றும் பூமியதிர்ச்சியின் அலைகளை மக்கள் உணர்ந்தார்கள். பெத்ரின்யா நகரில் ஒரு 12 வயதுச் சிறுமி கட்டட இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோனாள். பல கட்டடங்கள் சுக்குநூறாகி இடிந்து விழுந்ததாகவும், அவைகளின் கீழகப்பட்ட்டு வாகனங்கள் நொறுங்கியதாகவும் தொலைக்காட்சிப் படங்கள் மூலமும், ஊடகங்களின் மூலமும் அறியமுடிகிறது.
பெத்ரின்யா நகரம் இப்போதைக்குப் பாதுகாப்பற்றதாகக் குறிப்பிட்ட நாட்டின் பிரதமர் ஆந்திரேய் பிளென்கோவிச் அங்கிருந்து மக்களைப் பாதுகாப்பான பிராந்தியங்களுக்கு அனுப்ப ஆவன செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்பிராந்தியத்திற்கு அருகிலிருக்கும் ஸ்லோவேனியா நகரின் அணுமின்சார நிலையமொன்று உடனடியாகப் பூட்டப்பட்டிருக்கிறது. இந்த அணுமின்சார நிலையம் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய பிராந்தியத்திலிருப்பதால் 2023 ம் ஆண்டில் முழுவதுமாகப் பூட்டப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்லோவேனியாவுக்கும், கிரவேஷியாவுக்கும் பங்கு உரிமையான இந்த அணுமின்சார நிலையத்தைத் தொடர்ந்தும் 20 வருடங்கள் இயக்கத்தில் வைத்திருக்க 2015 இல் முடிவெடுக்கப்பட்டதால் 2023 இல் மூடத் திட்டம் இல்லை.
சாள்ஸ் ஜெ. போமன்